மயிலாடுதுறையில் தடம் புரண்ட ஜனசதாப்தி ரயில் : பயணிகள் தப்பினர்
By DIN | Published On : 08th July 2019 01:28 AM | Last Updated : 08th July 2019 01:28 AM | அ+அ அ- |

கோவையிலிருந்து மயிலாடுதுறை சென்ற ஜனசதாப்தி அதிவிரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பு அருகே தடம் புரண்டது. இதில், பயணிகள் காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினர்.
கோவையிலிருந்து மயிலாடுதுறைக்கும், மயிலாடுதுறையில் இருந்து கோவைக்கும் செவ்வாய்க்கிழமை தவிர்த்து மற்ற நாள்களில் ஜனசதாப்தி ரயில் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 7.11 மணிக்கு கோவையிலிருந்து 16 பெட்டிகளில், 1,300 பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட இந்த ரயில், வழக்கமான நேரத்துக்கு அரை மணி நேரம் தாமதமாக 2.10 மணிக்கு மயிலாடுதுறையை நெருங்கியது.
மயிலாடுதுறை ரயில்வே சந்திப்புக்கு சுமார் 1 கி.மீ. முன்பாக மெதுவாக வந்துகொண்டிருந்த ரயில், திருப்பத்தில் வரும்போது திடீரென தடம் புரண்டது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர்கள் அஜய்குமார், பாண்டியராஜ் பிரேக்கை அழுத்தி ரயிலை கவிழாமல் நிறுத்தினர். இதையடுத்து, ரயில் என்ஜின் மட்டும் கீழ் இறங்கிய நிலையில், சிறிய அதிர்வுகளோடு ரயில் பெட்டிகள் தண்டவாளத்திலேயே நின்றன. இதனால், ரயிலில் பயணம் செய்த சுமார் 1,300 பயணிகளும் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர். இவ்விபத்தில் 10-க்கும் மேற்பட்ட ஸ்லீப்பர் கட்டைகள், தண்டவாளம் சேதம் அடைந்தன.
பயணிகள் அனைவரும் இருப்புப் பாதை வழியே ஒரு கி.மீ. தூரம் நடந்து சென்று, ரயில் நிலையத்தை அடைந்தனர். திருச்சி-சென்னை இடையிலான பிரதான ரயில் வழித்தடத்தில் இந்த விபத்து நடந்ததால், இவ்வழியே செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
இதையடுத்து, ரயில் பெட்டிகள் பின்புறம் மாற்று என்ஜின் பொருத்தப்பட்டு, குத்தாலம் ரயில் நிலையத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டன. இதைத் தொடர்ந்து, இரவு 7.30 மணியளவில் நவீன ஹைட்ராலிக் ஜாக்கி மூலம் தடம் புரண்ட ரயில் என்ஜின் தூக்கி நிறுத்தப்பட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.