11, 12- ஆம் வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை: காவல்நிலையத்தில் மாணவிகள் புகார்

நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோயில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தரம்

நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோயில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தரம் உயர்த்தப்பட்டு ஓராண்டைக் கடந்தும், மேல்நிலை வகுப்புகளுக்கு இதுவரை ஆசிரியர்கள் பணியமர்த்தப்படவில்லை. 
இதைக் கண்டிக்கும் வகையில், அப்பள்ளி மாணவிகள் வெள்ளிக்கிழமை பேரணியாகச் சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
வைத்தீஸ்வரன்கோயிலில் தாமரைக்குளம் அருகே உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி கடந்த 2017-2018- ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. தற்போது, இப்பள்ளியில் 6 முதல் 12 -ஆம் வகுப்பு வரை 331 மாணவிகள் படித்து வருகின்றனர். இதில், பிளஸ் 1வகுப்பில்  41 மாணவிகளும், பிளஸ் 2 வகுப்பில் 11 மாணவிகளும்  நிகழாண்டில் பயின்று வருகின்றனர்.
 இப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டு, ஓராண்டைக்  கடந்தும், இதுவரை மேல்நிலை வகுப்புகளுக்கு நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. 2019-2020- ஆம் கல்வியாண்டுக்கான புதிய பாடத் திட்டங்களுடன் கடந்த ஜூன் 3-ஆம் தேதி பள்ளி திறக்கப்பட்டு, சுமார் 40 நாள்களைக் கடந்தும் இதுவரை நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இருப்பினும், பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் நியமிக்கப்பட்ட ஒரு தற்காலிக ஆசிரியர் மற்றும் பள்ளியில் பணியாற்றக் கூடிய பட்டதாரி ஆசிரியர்கள் மேல்நிலை வகுப்புகளில் பாடங்கள் 
நடத்திவருகின்றனர். 
காவல்நிலையத்தில் புகார்: மேல்நிலை வகுப்பில் பாடவாரியாக தனித்தனி ஆசிரியர்கள் இல்லாததால் பாதிக்கப்படும் மாணவிகள், பள்ளி நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
இந்நிலையில், மேல்நிலை வகுப்பு மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர் பள்ளியிலிருந்து பேரணியாக 1கி.மீ. தொலைவில் உள்ள வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலையத்துக்குச் சென்று, தங்கள் வகுப்புகளுக்கு நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்காதது குறித்து புகார் தெரிவித்தனர். அப்போது, காவலர்கள் மாணவிகளின் கோரிக்கையை கல்வித் துறைக்கு தெரிவிப்பதாகக் கூறி அவர்களை சமாதானம் செய்து பள்ளிக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவத்தால் வைத்தீஸ்வரன்கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது. 
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, "ஆசிரியர்களின் கலந்தாய்வுக்குப் பிறகுதான் 11 மற்றும் 12- ஆம் வகுப்புகளுக்கு நிரந்தர ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள். தற்போது, பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் நியமிக்கப்பட்ட ஒரு தற்காலிக ஆசிரியர் மற்றும் பள்ளியில் பணியாற்றக் கூடிய பட்டதாரி ஆசிரியர்கள் கணிதம், அறிவியல் போன்ற பாடங்களை நடத்தி வருகின்றனர். விரைவில், நிரந்தர ஆசிரியர்கள் 6 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர்' எனத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com