குடிமராமத்துப் பணி: விவசாயிகளிடம் அரசு செயலர் கருத்துக் கேட்பு

நாகை மாவட்டத்தில் பொதுப்பணித் துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை சார்பில் குடிமராமத்துப் பணிகள்

நாகை மாவட்டத்தில் பொதுப்பணித் துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை சார்பில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக, பொதுப்பணித் துறை அரசு கூடுதல் செயலாளர் எம். பாலாஜி வியாழக்கிழமை கள ஆய்வு செய்து, விவசாயிகளிடம் கருத்துகளைக் கேட்டறிந்தார்.
பொதுப்பணித் துறை மற்றும் நீர்வள ஆதாரத் துறை சார்பில் முதல்வரின் குடிமராமத்து திட்டப் பணிகளை (2019-2020) செயல்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. நாகை மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக திட்டத்தின் சிறப்பு அலுவலர் (பொறுப்பு) பொதுப்பணித் துறை அரசு கூடுதல் செயலாளர் (பாசனம்) எம். பாலாஜி, வேதாரண்யத்தை அடுத்த வாட்டாக்குடி, வேட்டைக்காரனிருப்பு, ஆலங்குடி, வெண்மணச்சேரி, கோகூர், பாலக்குறிச்சி, மேலஈசனூர், திருப்பூண்டி உள்ளிட்ட கிராமங்களில் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது, விவசாயிகளை சந்தித்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து கருத்துகளைக் கேட்டறிந்தார். 
பின்னர், அவர் தெரிவித்தது:
நீர் ஆதாரங்களை செம்மைப்படுத்தி, விவசாயிகள் பயன்பெறும் வகையில் நிகழாண்டு  நாகை மாவட்டத்தில் நீர்வள ஆதாரத் துறையின் மூலமாக ரூ.16 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டில் 82 பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்கள் ஆகியவற்றை தூர்வாரவும், பழுதடைந்த நீர்நிலை கட்டுமானங்களைப் புதுப்பிக்கவும், அடைப்புப் பலகைகளைப் புதுப்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அரசாணையில் அறிவிக்கப்பட்ட பணிகளை, இதன்மூலம் பயன்பெறும் விவசாயிகளைக் கொண்டு செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான மொத்த மதிப்பீட்டில் 90 சதவீதம் அரசு நிதியாகவும், 10 சதவீதம் விவசாயிகளின் பங்களிப்பாகவும் இருக்கும். எனவே, விவசாயிகள் குடிமராமத்து திட்ட அரசாணையில் தங்கள் பகுதி பணிகளுக்கான விவரத்தை நீர்வள ஆதாரத்துறை அலுவலகத்தில் பெற்று, பாசன சங்கங்களின் மூலமாக இப்பணிகளை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்றார் அவர்.
இந்த ஆய்வில், நாகை மாவட்ட ஆட்சியர் சீ.சுரேஷ்குமார், பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளர் வி. சண்முகநாதன், செயற்பொறியாளர் திருவேட்டைச்செல்வம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ. செல்வகுமார், உதவி செயற்பொறியாளர்கள் ஆசைத்தம்பி, பாண்டியன்,  உதவிப் பொறியாளர்கள் கண்ணப்பன், கமலக்கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜ், செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com