குழாய் மூலம் நெற்பயிரில் நீர் சிக்கனம்: வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்

குத்தாலம் வட்டம், மாந்தை கருப்பூர் கிராமத்தில் நெற்பயிரில் நீரை சிக்கனமாகப் பாய்ச்ச வயல் நீர் குழாய் செயல் விளக்கம் அண்மையில் நடைபெற்றது.

குத்தாலம் வட்டம், மாந்தை கருப்பூர் கிராமத்தில் நெற்பயிரில் நீரை சிக்கனமாகப் பாய்ச்ச வயல் நீர் குழாய் செயல் விளக்கம் அண்மையில் நடைபெற்றது.
 தமிழ்நாடு நீர் வள நிலவளத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் மற்றும் விஞ்ஞானிகளால் இந்த செயல்விளக்கம் நடைபெற்றது. கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நீர்நுட்ப மைய இயக்குநர் கிறிஸ்டோபர் லூர்துராஜ் செயல்விளக்கம் அளித்தார். தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் ஏ. அம்பேத்கர், முனைவர் சு. ராஜூ (உழவியல்), முனைவர்இளமதி (உழவியல்) ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் விஞ்ஞானிகள் கூறியது: பிலிப்பின்ஸ் நாட்டிலுள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையமானது நவீன நீர்ப்பாசன முறையான வயல் நீர் குழாய் கொண்டு "நீர் மறைய நீர் கட்டு' என்று முறையில் நீர்ப்பாசனம் செய்யும் போது, நீர்த் தேவையின் அளவு வெகுவாகக் குறைவதை உறுதிபடுத்தியுள்ளது. வயல்நீர் குழாய் தயாரிக்க 30 செ.மீ. அளவுள்ள பிளாஸ்டிக் குழாய் மற்றும் அதனுடைய விட்டமானது 15 செ.மீ. அளவு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். குழாயின் பாதியளவு, அதாவது 15 செ.மீ. அளவு வரை துளையிட வேண்டும்.  துளையின் விட்டமானது 0.5 செ.மீ. ஆகவும், துளைகளுக்கிடையே உள்ள இடைவெளி 2 செ.மீ.  ஆகவும் இருக்க வேண்டும். இந்த குழயைய நடவு செய்த 10- ஆம் நாளில் நிலமட்டத்தின் கீழ் 15 செ.மீ. இருக்குமாறு பொருத்தி குழாயின் உள்ளிருக்கும் மண்ணை எடுத்துவிட வேண்டும். வயலில் நீர்ப்பாசனம் செய்யும் போது, குழாயிலுள்ள துளையின் வழியாக வெளியே உள்ள நீரானது குழாயின் உள்ளே சென்று குழாயினுள் நீர் மட்டத்தை அதிகரிக்கும்.  குழாயிலுள்ள நீர் மறைந்தவுடன் மீண்டும் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.  பூப்பதற்கு ஒரு வாரம் முன்னும், பின்னும் வயலில் நீர் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.  இதனை களிமண் பாங்கான நிலத்திலும், நன்கு சமப்படுத்திய வயலிலும் பயன்படுத்தும் போது சிறப்பானதாக 
இருக்கும்.
வயல் நீர் குழாய் ஏக்கருக்கு ஒன்று என்ற அளவில் பயன்படுத்த வேண்டும்.  இதை வரப்புக்கு அருகில் பொருத்துவதினால் எளிதாக பார்வையிடலாம். இதன்மூலம் 25 முதல் 30 சதவீதம் நீரை சேமிக்கலாம். மின்சாரம், டீசல் தேவை குறைவு நிலத்தடி நீர் விரையமாவது குறைகிறது.  புவி வெப்பமயமாதல் குறைகிறது எனவிவசாயிகளிடம் விளக்கிக் கூறினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com