பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

மாற்றுத் திறனாளிப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் அனைவரையும் கைது

மாற்றுத் திறனாளிப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யக் கோரி ஜனநாயக மாதர் சங்கத்தினர் மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் அப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி பெண்ணும், கழுக்காணிமுட்டத்தைச் சேர்ந்த அருள்தாஸ் மகன் அலெக்ஸாண்டர் என்பவரும் காதலித்து வந்தனர். 
இந்நிலையில், கடந்த 7-ஆம் தேதி கடைக்கு சென்று வருவதாகக் கூறி வீட்டிலிருந்து வெளியே சென்ற மாற்றுத் திறனாளி பெண் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அவரது பெற்றோர்கள் பல இடங்களில் தேடினர். அப்போது, முட்புதரில் அரைகுறை ஆடையோடு மயக்கநிலையில் கிடப்பது தெரியவந்தது. அவரை, மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் விசாரணை மேற்கொண்ட மயிலாடுதுறை போலீஸார்,  மாற்றுத் திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக அலெக்ஸாண்டரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். 
இந்த சம்பவத்தில், அலெக்ஸாண்டருடன், அவரது நண்பர்களும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. அவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மற்றும் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் பேரணியாகச் சென்று, மயிலாடுதுறை வருவாய் கோட்ட அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் லதா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலைச்செல்வி, துரைராஜ், ராயர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி முழக்கமிட்டனர். பின்னர், மயிலாடுதுறை வருவாய் கோட்ட அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com