மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த உறுதியேற்க வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்

மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் விளைவுகளைக் கருத்தில் கொண்டு மக்கள் தொகை

மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் விளைவுகளைக் கருத்தில் கொண்டு மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்தார்.
உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியைக் கொடி அசைத்துத் தொடங்கி வைத்து, மேலும் அவர் பேசியது: 
1987-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி வரையிலான கணக்கெடுப்பில் உலக மக்கள் தொகை 500 கோடியை விஞ்சியுள்ளது. மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் பல்வேறு விளைவுகளைக் கருத்தில் கொண்டே குடும்ப நலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்ட செயலாக்கத்தில் இந்தியாவில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.
2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சீனாவுக்கு அடுத்த நிலையில் உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உருவாகியுள்ளது. இந்திய மக்கள் தொகை சுமார் 121 கோடியை விஞ்சியுள்ளது. சமூகப் பொருளாதார அடிப்படையில் இந்தியா மேலும் பின்தங்காமல் இருக்க, மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
உணவு, உடை, இருப்பிடப் பற்றாக்குறை, வேலையின்மை, குடிநீர்த் தட்டுப்பாடு, போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் பாதிப்பு என மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் பல்வேறு விளைவுகளை மக்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்றார் ஆட்சியர். 
மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் ஆர். மகேந்திரன், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக் கண்காணிப்பாளர் ஏ.எம். காதர், காசநோய் பிரிவு துணை இயக்குநர் எஸ்.எம். முருகப்பன், தொழுநோய்த் தடுப்புப் பிரிவு துணை இயக்குநர் சங்கரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ. செல்வகுமார், மாவட்ட மக்கள் கல்வி மற்றும் தகவல் தொடர்பு அலுவலர் ம. ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாகை பகுதியில் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் சுமார் 500-க்கும் அதிகமானோர் விழிப்புணர்வு பதாகைகளுடன் இப்பேரணியில் பங்கேற்றனர். 
நாகை ரயில் நிலையத்திலிருந்து தொடங்கிய இந்தப் பேரணி, நெல்லுக்கடை மாரியம்மன்கோயில், நாலுகால் மண்டபம், நீலா தெற்கு வீதி வழியே சென்று அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com