குளத்தை தூர்வாரிய நகராட்சி ஊழியர்கள்!

சீர்காழி நகராட்சி அனைத்து நிலை ஊழியர்கள், பணியாளர்கள் ஒட்டுமொத்தமாக களமிறங்கி, அரியாப்பிள்ளை குளத்தை தூர்வாரும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனர். 


சீர்காழி நகராட்சி அனைத்து நிலை ஊழியர்கள், பணியாளர்கள் ஒட்டுமொத்தமாக களமிறங்கி, அரியாப்பிள்ளை குளத்தை தூர்வாரும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனர். 
சீர்காழி நகராட்சிக்கு உள்பட்ட சிதம்பரம் பிரதான சாலையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரியாப்பிள்ளை குளம் உள்ளது. இந்த குளம் அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டத்தை சமன்செய்து வந்ததுடன் குடிநீர் அல்லாத மற்ற தேவைகளுக்கும் பயன்பட்டுவந்தது. அதோடு மழை காலங்களில் பெரும் வடிகாலாகவும் விளங்கியது.  குளம் நிரம்பினால் அந்த தண்ணீர் வாய்க்கால் வழியாக வெளியேறும் வகையிலும், குளத்தில் தண்ணீர் குறைந்தால் அதே வாய்க்கால் வழியாக குளத்தை நிரப்பும் வகையிலும் நீர்வழிப்பாதை இருந்தது. நாளடைவில் அரியாப்பிள்ளை குளம் ஆக்கிரமிப்பாலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும் அதன் பொழிவை இழந்து வறண்டு, செடி, கொடிகள் காடுகள் போல் முளைத்து காணப்படுகிறது. 
இந்நிலையில், மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டம் சீர்காழி நகராட்சி பகுதியில் மும்முரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நகர பகுதியில் உள்ள குளங்களில் மூன்று மாதங்களில் நீர் செறிவூட்டுதல், நீர் சேமிப்பு உள்ளிட்டவை செயல்படுத்தப்பட உள்ளன. இதன்மூலம் வரும் காலங்களில் நிலத்தடி நீரை சேமிப்பது தொடர்பாக தொடர்ந்து விழிப்புணர்வும், நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.  இத்திட்டத்தின் வழிகாட்டுதலின்படி, சீர்காழி நகராட்சிக்குள்பட்ட அரியாப்பிள்ளை குளத்தைத் தூர்வாரும் பணி நகராட்சி ஆணையர் அஜிதா பர்வின் தலைமையில் தொடங்கியது. இதில், நகராட்சி மேலாளர் ஆனந்தராஜ், நகரமைப்பு ஆய்வாளர் ஜி.ரவிச்சந்திரன், பணிதள மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வர் முத்துகிருஷ்ணன், துப்புரவு ஆய்வாளர் மோகன் உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள், ஊழியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் என 70-க்கும் மேற்பட்டவர்கள் ஜேசிபி இயந்திரம், டிராக்டர்கள் ஆகியவற்றின் உதவியுடன் குளத்தை சீரமைத்து தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.
முதல்கட்டமாக  குளத்தில் முளைத்திருந்த செடி, கொடிகள், குப்பைகளை அகற்றி கரைகளைப் பலப்படுத்தும் பணியை செய்தனர். வரும் நாள்களில் குளத்தின் மையப் பகுதியில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தும் பணியை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com