மக்கள் நீதிமன்றம்: 1,664 வழக்குகளுக்கு தீர்வு

நாகையில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றப் பணிகளின் போது 1,664 வழக்குகளுக்கு சனிக்கிழமை தீர்வு காணப்பட்டன. 


நாகையில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றப் பணிகளின் போது 1,664 வழக்குகளுக்கு சனிக்கிழமை தீர்வு காணப்பட்டன. 
நாகை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றப் பணிகள் நாகை நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றன. நாகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர். பத்மநாபன் தலைமையில் வழக்கு விசாரணைகள் நடைபெற்றன.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலாளரும், சார்பு நீதிபதியுமான ஆர். ஜெகதீசன், மாவட்ட மக்கள் நீதிமன்ற நீதிபதி என். மணிவண்ணன், தலைமை குற்றவியல் நடுவர் பி. பன்னீர்செல்வம், குற்றவியல் நடுவர் (நெ.1) கே. சீனிவாசன் ஆகியோர் வழக்கு விசாரணைகளை மேற்கொண்டனர். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஜீவனாம்ச வழக்குகள், சொத்து வழக்குகள், நில அபகரிப்பு வழக்குகள் என 4,308 வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்கப்பட்டு, 1,517 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ. 2.11 கோடி எனப்படுகிறது.
இதே போல, காசோலை மோசடி உள்பட வங்கிகள் தொடர்பான வழக்குகளில், 2,304 வழக்குகள் விசாரணைக்கு ஏற்கப்பட்டு, ரூ. 59 லட்சம் மதிப்பில் 147 வழக்குகள் முடித்து வைக்கப்
பட்டன. நாகை மாவட்ட சட்டப்பணிகள் குழு நிர்வாக அலுவலர் பி.என். முரளிதரன் மக்கள் நீதிமன்றப் பணிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
மயிலாடுதுறையில்...
 மயிலாடுதுறை நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றப் பணிகளின்போது பல்வேறு வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், முதன்மை சார்பு நீதிமன்றம், கூடுதல் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் மாவட்ட நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் ஆகியவை இயங்கி வருகின்றன. 
சனிக்கிழமை நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில், மக்கள் நீதிமன்றம் எனப்படும் லோக் அதாலத் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முதன்மை சார்பு நீதிபதி கெளதமன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ரிஷானா பர்வீன் ஆகியோர் வழக்குகளைப் பரிசீலித்தனர். 
கடந்த 2009-ஆம் ஆண்டு ஆத்துக்குடியில் வாகன விபத்தில் பலியான வழக்கில், கும்பகோணத்தைச் சேர்ந்த துரை மகள் ராகவி, சிதம்பரத்தைச் சேர்ந்த சிவகுருநாதன் ஆகியோரின் மரணத்துக்கு இழப்பீடாக அவர்களது குடும்பத்தினருக்கு முறையே ரூ.12.50 லட்சம் மற்றும் ரூ.7.10 லட்சம் இழப்பீட்டுத் தொகையை ஒரு மாதத்திற்குள் வங்கியில் செலுத்த அரசுப் போக்குவரத்து கழகத்துக்கு முதன்மை சார்பு நீதிபதி கெளதமன் உத்தரவிட்டார். 
இதுபோன்று, மோட்டார் வாகன விபத்து சட்டத்தின்கீழ் வழக்குகள், குறுக்கு விசாரணை வழக்குகள், வன்கொடுமை சட்டம், இந்து திருமண சட்டம், நிறைவேற்று மனு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com