அரசு பொதுத் தேர்வில் தமிழ்ப் பாடத்தில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்குப் பாராட்டு
By DIN | Published On : 15th July 2019 09:06 AM | Last Updated : 15th July 2019 09:06 AM | அ+அ அ- |

மயிலாடுதுறையில் சனிக்கிழமை நடைபெற்ற நற்றமிழர் ந.க. அறக்கட்டளை ஆண்டு விழாவில் கடந்த ஆண்டு அரசு பொதுத் தேர்வில் தமிழ்ப் பாடத்தில் முதலிடம் பிடித்த மாணவர்கள் மற்றும் இளம் சாதனையாளர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மயிலாடுதுறையில் மறைந்த முன்னாள் மாவட்டக் கல்வி அலுவலகக் கண்காணிப்பாளரும், முன்னாள் மயிலாடுதுறைத் திருக்குறள் பேரவைச் செயலாளருமான ந. கலியபெருமாள் நினைவு தினம், நற்றமிழர் ந.க. அறக்கட்டளை ஆண்டு விழாவாக தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, மயிலாடுதுறைத் திருக்குறள் பேரவைத் தலைவர் சி. சிவசங்கரன் தலைமை வகித்தார். பொருளாளர் சு. ராமச்சந்திரன், காமராசர் அறக்கட்டளை நிறுவனர் ந. செகநாதன், டிபிடிஆர் தேசிய மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் கே. பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், 2018-2019-ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்ப் பாடத்தில் முதலிடம் பிடித்த 13 மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்த 5 இளம் சாதனையாளர்களுக்கு, மூத்த வழக்குரைஞர் நா.கு. கிருட்டினமூர்த்தி, பள்ளித் தலைமை ஆசிரியர் கு. தாமரைச்செல்வன் ஆகியோர் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.
இதில், ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலர் இரா.ச. சொக்கநாதன், சென்னை மாற்றம் பவுன்டேஷன் அறக்கட்டளை இணை நிறுவனர் ரா. ராஜகோபாலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். புலவர் இரெ. சண்முவடிவேல் "அறத்தான் வருவதே இன்பம்' எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். முன்னதாக ஜி.எஸ்.எம். கருணா வரவேற்றார். முடிவில், ந.க. இராஜ்குமார் நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியை வீதி. முத்துக்கணியன், செக. கலைச்செல்வன் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.