ஜல் சக்தி அபியான் திட்டம் மூலம் நாகையில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்: மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணைச் செயலாளர்
By DIN | Published On : 19th July 2019 12:38 AM | Last Updated : 19th July 2019 12:38 AM | அ+அ அ- |

ஜல் சக்தி அபியான் திட்டம் மூலம் நாகை மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என திட்டத்தின் மத்திய ஒருங்கிணைப்பாளரும், மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணைச் செயலாளருமான சஞ்சீவ் பட்ஜோஷி தெரிவித்தார்.
ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நாகை மாவட்டத்தில் தீவிர காடு வளர்ப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. மத்திய ஊரக ஊரக வளர்ச்சித் துறை இணைச் செயலாளர் சஞ்சீவ் பட்ஜோஷி தலைமை வகித்து, மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கி வைத்துப் பேசுகையில், ஜல் சக்தி அபியான் திட்டம் மூலம் நாகை மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பின்னர், நீர் மேலாண்மை இயக்கத்தின் கீழ் மழை நீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு ரதத்தின் பயணத்தை அவர் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். நாகை மாவட்ட ஆட்சியர் சீ.சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட வனப் பாதுகாப்பு அலுவலர் சி. கலாநிதி, நாகை சார் ஆட்சியர் ஏ.கே. கமல்கிஷோர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ. தியாகராஜன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திரளான பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்று, ஆட்சியரக வளாகத்தில் 100 மரக்கன்றுகளை நட்டனர்.
நீர்நிலைகளில் குப்பையைக் கொட்டாதீர்...
இதேபோல், சீர்காழியில் உள்ள அரியாப்பிள்ளை குளம் மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டத்தின்கீழ் சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை ஜல்சக்தி அபியான் மேலாண்மை கண்காணிப்பு அலுவலரும், மத்திய ஊரக வளர்ச்சி இணைச் செயலாளருமான சஞ்சீவ்பட் ஜோஷி வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது அவரிடம் அப்பகுதி மக்கள் அரியாப்பிள்ளை குளத்தின் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி தூர்வாரினால்தான் இந்த திட்டத்தின் முழுபயன் நிறைவேறும் எனக் கூறினார்.
இதைக் கேட்டறிந்த அவர், பொதுமக்களும் குளங்களில் குப்பைகளைக் கொட்டவேண்டாம். குளத்தின் கரைகளில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க முன்வர வேண்டும். நீர்நிலைகளைப் பாதுகாப்பதில் பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது என்றார்.
ஆய்வின்போது, நாகை மாவட்ட ஆட்சியர் சீ.சுரேஷ்குமார், திட்ட இயக்குநர் தியாகராஜன், நகராட்சி ஆணையர் அஜிதாபர்வின், பொறியாளர் மெய்பொருள், பணிதள மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன், நகரமைப்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
செம்பனார்கோவிலில் ஆய்வு...
இதேபோல், செம்பனார்கோவில் பகுதியில் மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டம் மூலம் மழைநீர் சேகரிப்பு, மரம் நடுதல், குளங்களை மேம்படுத்துதல், நீர்நிலைகளை சீரமைத்து நிலத்தடி நீரைத் தேக்கும் பல்வேறு திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணைச் செயலாளர் சஞ்சீவ் பட்ஜோஷி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
செம்பனார்கோவில் பகுதியில் உள்ள முடிகொண்டநல்லூர், பரசலூர், திருச்சம்பள்ளி, கிடாரங்கொண்டான், காளஹஸ்தினாதபுரம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வு நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சீவ் பட்ஜோஷி, நாகை மாவட்டத்தில் பணிகள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, வரும் ஆண்டுகளில் நாகை மாவட்டத்தில் தண்ணீர் பிரச்னை தீரும் என்றார்.