நாகை மாவட்டத்தில் 16 இடங்களில் கடலோர பாதுகாப்பு
By DIN | Published On : 19th July 2019 12:39 AM | Last Updated : 19th July 2019 12:39 AM | அ+அ அ- |

கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில், நாகை மாவட்டத்தில் 16 இடங்களில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ஒத்திகையின்போது நாகை மாவட்டத்துக்குள் ஊடுருவ முயன்ற 6 பேரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
நாட்டின் நிதி தலைநகரான மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடலோர பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில், கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் கடற்படையினர் சார்பில் ஆண்டுதோறும் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாகை மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரின் ஏற்பாட்டின்பேரில், பயங்கரவாத ஊடுருவல் தடுப்பு ஒத்திகை வியாழக்கிழமை காலை 8 மணி முதல் வெள்ளிக்கிழமை இரவு வரை நாகை மாவட்டத்தில் உள்ள 51 கடலோர கிராமங்களில், 16 இடங்களில் நடத்தப்பட்டது. இதையொட்டி, நாகூருக்கு கிழக்கே சுமார் 4 கடல் மைல் தூரத்தில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தீவிரவாதிகள் போல் வேடமணிந்து கடல் மார்க்கமாக நாகூர் பகுதியில் ஊடுருவ முயன்ற 2 கடற்படை போலீஸார், 2 கமாண்டோ படை வீரர்கள், ஒரு சிறப்பு காவல்படை போலீஸார், ஒரு கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார் ஆகிய 6 பேரையும் மடக்கிப் பிடித்தனர். இவர்கள், நாகை மாவட்டத்தில் ஊடுருவி, நாகூர் இந்தியன் ஆயில் நிறுவன ஆயில் ஜெட்டி, வேளாங்கண்ணியில் உள்ள ஒரு விடுதி, திருக்கடையூரை அடுத்த பிள்ளைப்பெருமாநல்லூரில் உள்ள மின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றை தகர்க்க முயன்றது முறியடிக்கப்பட்டது. 3 மாதிரி வெடிகுண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பி. கலிதீர்த்தன் தலைமையில், ஆய்வாளர் பி. ராஜா மற்றும் கடலோர பாதுகாப்புக் குழுமம், கடற்படை, போலீஸார் உள்ளிட்ட 56 பேர் இந்த ஒத்திகையில் ஈடுபட்டனர்.
வேதாரண்யத்தில்...
நாகை மாவட்டம், வேதாரண்யம், கோடியக்கரை பகுதியில் அந்நிய ஊடுருவலைத் தடுப்பது தொடர்பான கண்காணிப்பு ஒத்திகையில் போலீஸார் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
கடல் வழியாக தமிழக கடலோரத்தில் அந்நிய ஊடுருவலைத் தடுப்பது தொடர்பாக கண்காணிப்பு பணி அண்மைக் காலமாக பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, அண்டை நாடான இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு தமிழக கடலோரப் பகுதிகள் பாதுகாப்பு வட்டாரங்களின் கவனத்தைப் பெற்றுள்ளன. ஆயினும், கடத்தல் போன்ற சம்பவங்களைக் காரணம் காட்டி, இலங்கையில் இருந்து படகுகளில் சட்ட விரோதமாக அந்நியர்கள் நுழைவது அண்மைக் காலமாக அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், கடலோர பாதுகாப்பு வட்டாரங்கள் சார்பில், கடலோரப் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. அதன்படி, அந்நியர்கள் ஊடுருவ ஏதுவான கோடியக்கரை உள்ளிட்ட கடலோர கிராமங்களில் வாகனச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணியில் ஏராளமான போலீஸார் ஈடுபட்டனர்.