ஊட்டச்சத்து மேம்பாட்டுப் பணிகளுக்குஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
By DIN | Published On : 21st July 2019 01:27 AM | Last Updated : 21st July 2019 01:27 AM | அ+அ அ- |

தேசிய ஊட்டச்சத்து குழுமத் திட்டத்தின் கீழ் நடைபெறும் ஊட்டச்சத்து நிலை மேம்பாட்டுப் பணிகளுக்கு அனைத்துத் துறை அலுவலர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்தார்.
நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற, ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் சார்பிலான தேசிய ஊட்டச்சத்துக் குழுமப் பணிகள் குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மேலும் அவர் பேசியது :
5 வயதுக்குள்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் இறப்பு விகிதத்தைக் குறைக்கவும், குழந்தைகளின் குள்ளத்தன்மை, எடைக்குறைவு, ரத்தச் சோகை போன்ற குறைபாடுகளைப் போக்கவும் தேசிய ஊட்டச்சத்துக் குழுமம் மூலம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு அனைத்துத் துறை அலுவலர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் என். ராஜம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை, சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, உணவுத் துறை, சமூக நலத் துறை, கல்வித் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட அரசுத் துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.