Enable Javscript for better performance
7 மாதங்களாகியும் அகற்றப்படாத "கஜா' புயல் கழிவுகள்: கால்வாய் அடைப்புகளால் பாசனம் பாதிக்கும்?- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    7 மாதங்களாகியும் அகற்றப்படாத "கஜா' புயல் கழிவுகள்: கால்வாய் அடைப்புகளால் பாசனம் பாதிக்கும்?

    By DIN  |   Published On : 23rd July 2019 06:27 AM  |   Last Updated : 23rd July 2019 06:27 AM  |  அ+அ அ-  |  

    கஜா புயலின்போது சேதமடைந்து நீர்நிலைகளுக்குள் அடித்துவரப்பட்ட மரங்கள், கட்டுமானக் கழிவுகள் 7 மாதங்களாகியும் அகற்றப்படாததால், எதிர்காலத்தில் பாசனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
    கூடுதல் மதிப்பீடுகளைக் கொண்ட திட்டங்கள் கிடைக்காவிட்டாலும் மழைக்காலத்தைக் கருத்தில்கொண்டு, நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளர்களைக் கொண்டாவது கழிவுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். கஜா புயலின்போது பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கடற்கரையோரம் அரசுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்த கருவேல மரக் காடுகள், விவசாயிகள் பராமரித்து வந்த சவுக்கு உள்ளிட்ட ஏராளமான மர வகைகள், வைக்கோல் போர்கள், தாவரங்கள் காற்றில் சூறையாடப்பட்டன.
    கூரை வீடுகள், கட்டுமானங்கள் என பல வகையான பொருள்கள் காற்றில் அடித்துவரப்பட்டு கழிவுகளாக ஆங்காங்கே தேங்கின. திறந்தவெளி, தனியார் இடங்களில் கிடந்த கழிவுகள் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. காய்ந்துபோன காழிவுகள் தீவைத்து அழிக்கப்பட்டுள்ளன.
    ஆனால், குளம், ஆறுகள், கால்வாய்கள் என பொது நீர்நிலைகளுக்குள் அடித்துவரப்பட்ட கழிவுகள் பல இடங்களில் புயல் வீசி 7 மாதங்களைக் கடந்தும் அகற்றப்படாமல் காணப்படுகின்றன.
    இது பல இடங்களில் சுகாதாரக் கேடுகளுக்கு வழிவகுப்பதோடு, எதிர்காலத்தில் பாசனம் மற்றும் வடிகால் பயன்பாட்டின்போது பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு மாறிவருகிறது.
    உதாரணமாக, திருத்துறைப்பூண்டியிலிருந்து நாகை மாவட்டத்தின் எல்லையோரமாக கடலில் இணையும் முள்ளியாற்றில் தாணிக்கோட்டகம் கிராமப் பகுதிக்கு கீழ் அமைந்துள்ள ஆற்றுப் பகுதி முற்றிலுமாக கழிவுகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
    இந்த ஆற்றில் ஏற்கெனவே வளர்ந்து பல ஆண்டுகளாக அகற்றப்படாமல் அடர்ந்து வளர்ந்திருந்த வெங்காயத் தாமரை, வேலிக்காட்டமணக்கு ஆகிய தாவர வகைகள், வெயிலின் தாக்கத்தால் காய்ந்து கருகி காணப்படுகின்றன.
    அவற்றுடன், புயலின்போது முறிந்து ஆற்றுக்குள் விழுந்த மரங்கள், சாலையோரப் பகுதியில்  இருந்த கட்டுமானங்களின் பாகங்கள், தண்ணீரில் அடித்துவரப்பட்ட பாலித்தீன் பைகள், புயலில் சூறையாடப்பட்ட துணிகள் உள்ளிட்ட உடைமைகள் கழிவுகளாக ஆறுகளில் தேங்கிக் கிடக்கின்றன. தகட்டூர் - வாய்மேடு, பஞ்சநதிக்குளம், தென்னடார் பகுதியில் ஆற்றின் பக்கவாட்டில் இருந்த நூற்றுக்கணக்கான புங்கை மரங்கள், அடித்துவரப்பட்ட கருவேல மரங்கள் சேதமடைந்து பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. மின் இறவை பாசனத் திட்டப் பொறிமனைக்கு செல்லும் கால்வாய் பொதுப் பணித்துறை பராமரிப்பில் இருந்தாலும் அவை கவனம் பெறாமல், மாசடைந்து சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஆனால், டெல்டாவின் பிரதான வடிகாலான முள்ளியாற்றில் தேங்கியுள்ள கழிவுகள் எதிர்காலத்தில் பருவமழையின்போது, தரைப்பாலங்கள், இயக்கு அணைகளில் சிக்கி வெள்ள பாதிப்புக்கு வழிவகுத்துவிடும் என விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
    குடிமராமத்துப் பணி பயனளிக்குமா?:
    தமிழக அரசு செயல்படுத்தும் குடிமராமத்து திட்டப் பணியின்கீழ் இந்த ஆறுகள் தூர்வாரப்படுமா என்ற விவசாயிகளின் கோரிக்கை கடந்த ஆண்டுகளைப்போலவே தொடர்கிறது. ஆனால், இந்த ஆறுகளில் பயன்தரும் வகையில் மணல் வளம் இல்லாததால் அந்த திட்டம் பயனளிக்கவில்லை. பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளில் நூறு நாள் வேலைத் திட்டப் பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படாததால் அந்த திட்டமும் பயனளிக்கவில்லை.
    நூறு நாள் வேலைத் திட்டமாவது?:
    ஆறுகளை தூர்வாராவிட்டாலும், கருவேல மர முள், புயலில் அடித்துவரப்பட்ட கழிவுகளையாவது அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரிய திட்டங்களை செயல்படுத்துவதில் பிரச்னை இருந்தாலும், எதிர் வரும் மழைக்காலத்தைக் கருத்தில்கொண்டு, நூறுநாள் வேலைத் திட்டத்திலாவது கழிவுகளை அகற்றும் பணியை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp