சாலைப் பணி: கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 24th July 2019 06:41 AM | Last Updated : 24th July 2019 06:41 AM | அ+அ அ- |

நாகப்பட்டினம் -விழுப்புரம் நான்கு வழிச்சாலை விரிவாக்கத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி, நாகையை அடுத்த புத்தூர் ரவுண்டாவில், நில உரிமையாளர்கள் குழுமம் சார்பில் செவ்வாய்க்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேசிய நெடுஞ்சாலை எண் 45-ஏ நாகப்பட்டினம் - விழுப்புரம் இடையிலான நான்கு வழிச்சாலை விரிவாக்கத்துக்காக சாலையோரங்களில் உள்ள வீடு, மனைகள், நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
இதற்கான இழப்பீட்டுத் தொகை குறைவாக வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு நில உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், உரிய இழப்பீடு வழங்கக் கோரி நில உரிமையாளர்கள் குழுமம் சார்பில் நாகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மனிதநேய ஜனநாயகக் கட்சி பொதுச் செயலாளரும், நாகை சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான எம். தமிமுன் அன்சாரி தலைமை வகித்தார். நில உரிமையாளர்கள் குழும சங்கத்தின் தலைவர் எஸ். ஷாகுல் ஹமீது, செயலாளர் எஸ். ஜி. எஸ். கணேசன், பொருளாளர் கே. ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நில உரிமையாளர்கள், விவசாயிகள் குழும செயற்குழு உறுப்பினர் சேகர், சட்ட ஆலோசகர் ஜி. பாண்டியன், ஆக்கூர் பகுதி நில உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆனந்தன், செயலாளர் முத்துக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சுந்தர் ஆகியோர் கோரிக்கைகளை
வலியுறுத்திப் பேசினர். முன்னாள் எம்எல்ஏ-க்கள் எம்.ஜி.கே. நிஜாமுதீன், நாகை மாலி, வி. மாரிமுத்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நாகை தெற்கு மாவட்டச் செயலாளர் ஆர். சந்திரமோகன், விவசாய சங்கத்தைச் சேர்ந்த மூர்த்தி மற்றும் அரசியல் கட்சியினர், நில உரிமையாளர்கள், விவசாயிகள், நாகூர், தெத்தி, வடகுடி, வாஞ்சூர், மஞ்சக்கொல்லை, செல்லூர், ஆக்கூர், கொள்ளிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கி, பகல் 2 மணி வரை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.