Enable Javscript for better performance
புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்தரங்கு- Dinamani

சுடச்சுட

    

    மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரி தமிழாய்வுத் துறையின் திண்ணை அமைப்பு சார்பில் புதிய கல்விக் கொள்கை -2019 என்ற கருத்தரங்கம் மற்றும் மாணவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.   
    கருத்தரங்குக்கு, தமிழாய்வுத் துறை பேராசிரியர் முனைவர் சு.ரமேஷ் தலைமை வகித்து "புதிய கல்விக்கொள்கையின் நோக்கும், போக்கும்' என்ற தலைப்பில்  பேசினார். தமிழாய்வுத் துறைத் தலைவர் முனைவர் சு. தமிழ்வேலு, முன்னாள் பொருளாதார துறைத் தலைவர் முனைவர் எஸ். இராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியர் சி. சந்திரசேகர் கலந்து கொண்டு, புதிய கல்விக் கொள்கையில் சுட்டிக்காட்டியுள்ள வகையில் மூளை வளர்ச்சி, கற்றல் ஆகியவற்றின் கோட்பாடுகள் பற்றியும், புதிய வளர்ச்சி, வளர்ச்சிக்கு ஏற்ற பாடத் திட்டம், கற்பித்தல் முறை, பள்ளிக் கல்விக்கென உருவாக்கப்பட்டு உள்ளதையும் உயர் கல்வியில் தற்போதுள்ள 800 பல்கலைக்கழகங்கள், 40 ஆயிரம் கல்லூரிகள், 15 ஆயிரம் சிறந்த நிறுவனங்களாக இணைத்து வலுப்படுத்தப்படும் என்ற புதிய கல்விக்கொள்கையின் முதன்மைச் சாராம்சங்களை சுட்டிக்காட்டிப் பேசினார். 
    பின்னர் பேராசிரியர் வி.நாகலெட்சுமி நெறியாளராகவும், தமிழாய்வுத் துறை மாணவர்கள் மூன்று குழுக்களாகப் பிரிந்து புதிய கல்விக்கொள்கையில் உள்ள நன்மை, தீமைகள் குறித்து கலந்துரையாடினர். இதில் பிறதுறைப் பேராசிரியர்கள் மற்றும் திரளான மாணவர்கள் கலந்துகொண்டனர். 
    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா.சியாமளா ஜகதீஸ்வரி, தமிழாய்வுத் துறைப் பேராசிரியர்கள் அலுவலக உதவியாளர் க. பாலமுருகன் ஆகியோர் செய்திருந்தனர். பேராசிரியர் முனைவர் க.தமிழ் அழகன் தொடக்க உரையாற்றினார். மாணவர் அ.அன்புநிதி வரவேற்றார். மாணவி ரா.கெளசிகா நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai