Enable Javscript for better performance
மழைநீர் சேகரிப்பு: புதிய செயல்திட்டம் வகுக்கப்படுமா?- Dinamani

சுடச்சுட

    

    மழைநீர் சேகரிப்பு: புதிய செயல்திட்டம் வகுக்கப்படுமா?

    By அ. அன்புமணி  |   Published on : 25th July 2019 06:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகப்பட்டினம்: பருவமழை பொய்த்துவிட்டதாலும், நீர்நிலைகள் வறண்டு காணப்படுவதாலும் கடந்த 50 ஆண்டுகளில் தமிழகம் கண்டிராத வகையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்களின் எதிர்கால நலன் கருதி தொலைநோக்குப் பார்வையுடன் மழைநீர் சேகரிப்புக்கு புதிய செயல்திட்டத்தை வகுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சூழலியல் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    நீர் மேலாண்மையில் உலகத்துக்கே முன்னோடிகளாக விளங்கிய தமிழர்கள் நமக்கு விட்டுச் சென்ற அணைகள், ஆறுகள், குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளை நாம் பாதுகாக்கத் தவறியதால் தண்ணீருக்காகப் படும் வேதனைகளும், சோதனைகளும் ஏராளம். பாசன நீர் தேவைக்காக போராடிய மக்கள் இன்று குடிநீருக்காக வீதிக்கு  வந்து போராடுகின்றனர். பெருநகரங்களில் இருந்து வந்த குடிநீர் தட்டுப்பாடு, தற்போது கிராமங்களுக்கும் வந்துவிட்டன.
    தோண்டும் இடங்களில் எல்லாம் பெட்ரோலியப் பொருள்கள் கிடைக்கும் வளைகுடா நாடுகளில் கூட குடிநீருக்கு தட்டுப்பாடு இல்லை. ஆனால்,  39,000 ஏரிகள், லட்சக்கணக்கான குளங்கள், ஊருணிகள், கண்மாய்கள் கொண்ட தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாகவே தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது.
    தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். நீர்நிலைகள் வறண்டதால் எண்ணிலடங்கா விலங்குகள், கால்நடைகள், பறவையினங்கள் மடிந்து வருவது தொடர்கின்றன. ஒரு குடம் தண்ணீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் நடக்கவும், நாள்கணக்கில்  வீதிகளில் காத்திருக்கவும் மக்கள் பழகிவிட்டனர். உணவுப் பொருள்களை காசு கொடுத்து வாங்கும் மக்கள் இன்று குடிப்பதற்கும், அன்றாடத் தேவைகளுக்கும் தண்ணீரை காசு கொடுத்து வாங்குகின்றனர். 2019 -ஆம் ஆண்டிலேயே இத்தகைய நிலைப்பாட்டை எதிர்கொள்ளும் மக்கள், எதிர்காலத்தில் என்ன நிலைக்கு ஆட்படப்போகிறார்கள் என்பதை கற்பனை செய்து கூட பார்க்க இயலவில்லை.
    இந்தியாவில் 5,000 -க்கும் மேற்பட்ட வட்டாரங்களிலும், தமிழகத்தில் 541 வட்டாரங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. சாகுபடி செய்யும் பரப்பளவுக்கு ஏற்ற பாசன வசதி இந்தியாவில் இல்லை. பாசனத்துக்கும், குடிநீருக்கும் நீர் சேமிப்பு அவசியமாகியிருக்கும் நிலையில், பெய்யும் ஒட்டு மொத்த மழையில் 8 சதவீத மழைநீர் மட்டுமே சேமிக்கப்படுகிறது. மீதமுள்ள மழைநீர் வீணாக கடலில் கலக்கிறது. 
    1,30, 058 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தமிழகத்தின் தற்போதைய மக்கள் தொகை 10 கோடியை நெருங்கிக்கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் இது மேலும் அதிகரிக்கும் என்பதால், மக்கள் தொகைக்கேற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நிலை தமிழகத்தில் உள்ளது.
    மணல் கொள்ளை, ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றால் தமிழகத்தின் நீர் தேவையைப் பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் காவிரி, பாலாறு, செய்யார், பென்னாறு, வளப்பாறு, வைகை, தாமிரவருணி போன்ற ஆறுகள் பொலிவிழந்துள்ளன. ஊருக்கு அழகு சேர்த்த குளங்கள், ஏரிகள், அகழிகள், ஆழ்கிணறு, கட்டுங்கிணறு, கண்மாய்கள், கலிங்கு, கால்வாய், குட்டைகள் ஆகிய நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகள், அரசு அலுவலகங்களுக்கான கட்டுமானங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், சாலைகள், குடியிருப்புகளாக காட்சியளிக்கின்றன.
    கடும் தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் சென்னை மாநகரத்தைச் சுற்றியிருந்த 600 -க்கும் மேற்பட்ட ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்குள்ளாகியதால், அங்கு தற்போது 20 -க்கும்  குறைவான ஏரிகளே உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் உள்ள பிற நகரங்களின் நிலைப்பாடும் இதுவே. வண்டல் மண் சமவெளி  பகுதியான திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மற்றும் விழுப்புரம், காவிரி சமவெளி பகுதியான நாகை,  திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் கூட கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
    நெல் சாகுபடிக்கு அதிக தண்ணீர் தேவை என்ற நிலையில் உள்ள விவசாயிகளுக்கு பாசனத்துக்குத் தேவையான தண்ணீர் எப்போதும் கிடைத்தப்பாடில்லை. இதனால் பாசன நீர் பற்றாக்குறை மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. தமிழகத்தில் பருவமழையின் அளவு குறைந்து வரும் நிலையில் கிடைக்கும் நீரை சேமித்தால்தான் தேவையான தண்ணீர் தேவையைப்  பூர்த்தி செய்துகொள்ள முடியும் என்ற நிலையில் தமிழகம் இருந்து வருகிறது. 100 முதல் 200 அடி வரை இருந்த நிலத்தடி நீர் மட்டம் 500 முதல் 1,000 அடி வரை சென்றுவிட்டது. வறட்சி பாதித்த மாவட்டங்களில் 1,000 அடி தூரத்துக்கு கீழ் நிலத்தடி நீர் சென்றுவிட்டது.
    மழைநீரை சேமிப்பதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயரும், நீர்  நிலைகளில் நீர் பெருகி நிற்கும், கடல் நீர் உள்புகுவதைத் தடுக்க முடியும், மண் அரிப்பு தடுக்கப்படும் என்ற புரிதலும் ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் இல்லை.
    தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும், நீர் நிலைகளைத் தூர்வார வேண்டும் என அரசியல் கட்சியினரும், மக்களும் ஆங்காங்கே போர்க் கொடி உயர்த்தியுள்ள நிலையில், அரசு நடவடிக்கை மேற்கொண்டாலும் நீர்நிலைகள் முழுமையாக தூர்வாரப்படுதல் என்பது இயலாத ஒன்றாகவே உள்ளது.
    மழைநீர் சேகரிப்பு திட்டத்தைச் செம்மையாக  நடைமுறைப்படுத்தினால் தண்ணீர் பிரச்னையை சமாளிக்க முடியும். தவறும்பட்சத்தில் தமிழகம் வளத்திலும், வளர்ச்சியிலும் பின்னடைவை சந்திக்கும், தண்ணீருக்காக மக்கள் மத்திய, மாநில அரசுகளால் எதிர்கொள்ள முடியாத மிகப்பெரிய போராட்டங்களிலும் ஈடுபட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள், போதுமான தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக ஆட்சியாளர்கள் தற்போது கூறிவருவதுபோல் அதுபோன்ற காலகட்டத்தில் எளிதில் கூறிவிட முடியாது என சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில்  2001-இல்  கட்டாய மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தார். இத்திட்டத்துக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. கட்டாய மழைநீர் சேகரிப்பு திட்டம் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் கட்டடங்களிலும் செயல்படுத்தப்பட்டு, பின்னர் கிடப்பில் போடப்பட்டது. இதற்காக செலவிடப்பட்ட நிதியும் வீணாகியது. இத்திட்டம் நடைமுறையில் இருந்தபோது சென்னையிலும் பிற நகரங்களிலும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருந்தது. இத்திட்டம் மட்டும் முழுமையாக செயல்படுத்தப்பட்டிருந்தால், நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்ந்திருக்கும் என்பதுடன், குடிநீர் தட்டுப்பாடு என்ற பிரச்னை இருந்திருக்கவே வாய்ப்பில்லை எனவும் மக்களும், அரசு அதிகாரிகளும் கூறுகின்றனர்.
    நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சி எடுக்கப்படுவதால் நீர் வளம் குறைந்து வருகிறது. பெருகிவரும்  மக்கள் தொகை, அதற்கேற்ற உணவுத் தேவை மற்றும் தொழில் முன்னேற்றம் ஆகியவைகளால் தண்ணீர் தேவையும் நாளுக்குநாள் அதிகரிக்கும். 2025 -இல் இந்தியாவின் மக்கள் தொகை 139.4 மில்லியன் எனவும் கணக்கிடப்படுகிறது. மக்கள் தொகைக்கு நிகரான நீர் வளத்தைக் கணக்கிட்டால், 50 சதவீதம் பற்றாக்குறை ஏற்படலாம். இதை கருத்தில் கொண்டுதான் பிரதமர் நரேந்திர மோடி நீர் பாதுகாப்பை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், இதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது.
    பருவ மழைக்காலம் தொடங்குவதற்குள் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2001 -இல் அறிவித்த கட்டாய மழைநீர் சேமிப்பு திட்டத்தை தமிழகத்தில் மீண்டும் நடைமுறைப்படுத்தவும்,  கிராமங்கள்தோறும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள்,  மழைநீர் உறிஞ்சு குழாய்கள், மேம்படுத்தப்பட்ட  மழைநீர் சேகரிப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தவும்,பொதுமக்களிடையே  மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதற்கான ஒரு புதிய செயல் திட்டத்தை வகுக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சூழலியல் மற்றும் நீர்நிலை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
    இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறியது:  கட்டாய மழைநீர் சேமிப்பு  திட்டத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென தமிழக அரசு, அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களிலும் ரூ. 8 ஆயிரம் முதல் சுமார் ரூ. 1.50 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. இவை தவிர தமிழகத்தின் பல கிராமங்களில் மேம்படுத்தப்பட்ட மழைநீர் சேகரிப்பு தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
    இத்திட்டம் குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள், சேவை சங்கங்கள் ஆங்காங்கே நீர் நிலைகளை சுத்தப்படுத்தி நீரை சேமிக்க முன்வர வேண்டும். கிராமங்களிலும், நகரங்களிலும் மழைநீர் சேகரிப்பு குட்டைகளை அமைக்க வேண்டும். அப்போதுதான் நிலத்தடி நீர் மட்டம் உயரும். எதிர்கால தண்ணீர் தேவையையும் நம்மால் பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்றார்.
    நீர்நிலை ஆர்வலர் ஒருவர் கூறியது : 60 சதவீத தண்ணீர் தேவையை நிலத்தடி நீர் மூலம் சரி செய்து கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டம் நடைமுறையில் இருந்தபோது அதிகளவு மழைநீர் பூமிக்குள் சென்றது. அப்போது உயர்ந்திருந்த நிலத்தடி நீர் மட்டம், தற்போது குறைந்து வருகிறது.
    மழைநீர் சேமிப்பால் மட்டுமே எதிர்காலத்தில் மக்கள் நிலையான குடிநீர் ஆதாரத்தைப் பெற முடியும். நிலத்தடி நீரை பயன்படுத்துவது தவறில்லை. அதேநேரத்தில், அதற்கு நிகரான தண்ணீரை சேமிக்க வேண்டும். பூமித்தாயிடமிருந்து எடுக்கும் நாம், அதற்கு கொடுப்பதற்கும் தயாராக இருக்க வேண்டும். இதற்காக  மத்திய, மாநில அரசுள் பல்வேறு அமைப்புகளின் மூலம் கிணறுகள் மற்றும் குளங்களை சுத்தப்படுத்துதல், நீர் சேமிப்பு குழிகளை அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். தடுப்பணைகள் கட்டுதல் போன்ற திட்டங்களை அரசு செய்ய வேண்டும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பது அவசியம்  என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai