முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
ஆடிப்பெருக்கு: காவிரியில் தண்ணீர் திறக்கக் கோரிக்கை
By DIN | Published On : 30th July 2019 06:48 AM | Last Updated : 30th July 2019 06:48 AM | அ+அ அ- |

ஆடிப் பெருக்கு விழாவுக்காக காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு மயிலாடுதுறை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
மயிலாடுதுறையில் ஆண்டாண்டு காலமாக ஆடிப்பெருக்கு விழாவின்போது, காவிரி ஆற்றில் புனித நீராடி கொண்டாடும் நிகழ்ச்சி, வடநாட்டின் கும்பமேளா போன்று நடைபெற்று வருகிறது. கங்கை தனது பாவத்தை போக்கிட வரம் கேட்ட போது சிவபெருமான் ஐப்பசி மாதம் மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் மூழ்கி நீராடினால், பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்று வரம் அளித்ததாக ஐதீகம்.
அந்த நம்பிக்கையின் பேரில் லட்சக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் துலாக்கட்ட விழாவுக்கும், ஆடிப்பெருக்கு விழாவுக்கும் மயிலாடுதுறைக்கு வந்து காவிரியில் புனித நீராடுகிறார்கள். ஆனால், கடந்த பல ஆண்டுகள், காவிரியில் தண்ணீர் திறக்க மக்கள் முறையிட்டும், பொதுப்பணித் துறை கைவிரித்துவிட்டது. நிகழாண்டு, அரசு நடவடிக்கை எடுத்து ஆடிப்பெருக்கு விழாவுக்கு, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என அதில் கோரிக்கை விடுத்துள்ளார்.