முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
கஜா புயலில் சேதமடைந்த காந்தி பூங்கா சீரமைக்கப்படுமா?
By DIN | Published On : 30th July 2019 06:47 AM | Last Updated : 30th July 2019 06:47 AM | அ+அ அ- |

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கஜா புயலின்போது சேதமடைந்த காந்தி பூங்காவை சீரமைத்து, விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சுதந்திரப் போராட்ட வரலாற்றில் 1930 -இல் வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகப் போராட்டம் குறிப்பிடத்தக்க பதிவாக அமைந்துள்ளது.
இந்த போராட்டத்துக்கு தலைமை வகித்த ராஜாஜியின் நினைவாக வேதாரண்யம் மேல வீதியில் அமைந்துள்ள ராஜாஜி பூங்கா பராமரிக்கப்பட்டு வருகிறது. இதே வளாகத்தில் அமைந்துள்ள அண்ணா அரங்கம், சுவாமி விவேகானந்தர் சிலை, தந்தை பெரியார் சிலை - படிப்பகம் போன்றவை அந்தந்த தலைவர்களை கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இதேபோல், நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட மகாத்மாவின் பெயரில் அமையப்பெற்றதுதான் இங்குள்ள காந்தி பூங்கா.
வேதாரண்யம் அரசு பயணியர் மாளிகை சாலை பகுதியில் அமைந்துள்ள காந்தி பூங்கா நகரத்தின் முக்கியமான இடமாக கருதப்படுகிறது. இந்த பூங்காவை மையமாக வைத்து மிக அருகாமையான இடங்களில் நகராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை, அரசு கால்நடை மருத்துவமனை, அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை, உயர் அதிகாரிகள் வந்து தங்கி செல்லும் அரசு பயணியர் மாளிகை, அரசு நூலகம், காவல் நிலையங்கள், ரயில் நிலையம், தீயணைப்பு நிலையம், வேளாண்மை, தோட்டக்கலைத் துறை அலுவலகங்கள் என இன்னும் பல அலுவலகங்கள், குறிப்பிடத்தக்க இடங்களில் அமைந்திருப்பது சிறப்பானது.
இந்த பூங்கா கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சில தவிர்க்க முடியாத சூழல்களால் போதிய பராமரிப்பு இல்லாமல் இருந்து வந்தது.
இந்த பூங்கா, 2009 -ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறையின் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 15 லட்சம் மதிப்பில் புதிய பொலிவுடன் சீரமைக்கப்பட்டது.
பூங்காவின் அருகாமையிலேயே அரசு நூலகம் அமைந்துள்ளதால் அமர்ந்து படிக்கும் கான்கிரீட் இருக்கைகள், பொதுமக்கள், சிறுவர்கள் பொழுதுபோக்குக்கான கட்டமைப்புகள், நீர் ஊற்று, பூச்செடிகள், நிழல் தரும் மரங்கள் என பல அம்சங்களில் பூங்கா புதிய பொலிவை பெற்றிருந்தது. இந்த பூங்கா பெண்கள், சிறுவர்கள் என பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டு, தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வந்தது.
கடந்த ஆண்டில் ஏற்பட்ட கஜா புயலின்போது பூங்காவில் இருந்த மரங்கள், பூச்செடிகள், விளக்குகள் என பல கட்டமைப்புகள் சேதமடைந்தன.
ஏழு மாதங்களைக் கடந்து விட்ட நிலையிலும், பூங்கா சீரமைக்கப்படவில்லை. முறிந்த மரங்கள், கட்டமைப்புகள் கூட முழுமையாக அகற்றப்படாத நிலையில் அதன் சிறப்பை இழந்துள்ளது. பூங்காவின் நுழைவு வாயில் பெயரளவில் திறந்து வைக்கப்பட்டாலும் பூங்காவுக்குள் செல்வோர் இல்லாத நிலையிலேயே பொது மக்களுக்கு பயனற்று காணப்படுகிறது.
கஜா புயலுக்குப் பிறகு கடற்கரைக்குச் செல்லும் சாலைகளும் சேதமடைந்ததால் பொழுதுப்போக்குக்கு வேறு இடம் இல்லாத நிலையில் பூங்காவும் சீரமையாதது பொதுமக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாது சிறுவர்களின் உடற்பயிற்சிக்கும், நூலக வாசகர்கள், பெண்கள் என பல தரப்பினருக்கும் பயனளித்து வந்த காந்தி பூங்காவை சீரமைத்து, மீண்டும் திறக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.