முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
குறுவை பயிர்க் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள்
By DIN | Published On : 30th July 2019 06:53 AM | Last Updated : 30th July 2019 06:53 AM | அ+அ அ- |

திருமருகல் வட்டார விவசாயிகள் குறுவை பயிர்க் காப்பீடு செய்ய புதன்கிழமை (ஜூலை 31) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் க. சிவக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், நாகை மாவட்டத்தில் குறுவை நெற்பயிருக்கு இந்தியா லிமிடெட் நிறுவனத்தால் காப்பீடு செய்யப்படுகிறது. பயிர்க் கடன் பெறும் விவசாயிகள் அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாக பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யப்படுவர். கடன் பெறாத விவசாயிகள் அங்கீகரிக்கப்பட்ட பொது சேவை மையங்கள் மூலமாகவோ, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாகவோ விருப்பத்தின்பேரில் பயிர்க் காப்பீடுக்குப் பதிவு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில், பதிவு செய்ய புதன்கிழமை கடைசி நாளாகும். பயிர்க் காப்பீட்டுத் தொகையில் விவசாயிகள் 2 சதவீதம் மட்டும் அதாவது நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 620 காப்பீடுக் கட்டணமாக செலுத்தினால் போதுமானது. விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது, முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்தியபின், அதற்கான ரசீதையும் பொது சேவை மையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.