முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
தமிழக அரசு அடுத்து அறிவிக்கும் மாவட்டமாக மயிலாடுதுறை இருக்க வேண்டும்: செ. நல்லசாமி கோரிக்கை
By DIN | Published On : 30th July 2019 06:51 AM | Last Updated : 30th July 2019 06:51 AM | அ+அ அ- |

தமிழக அரசு அடுத்து அறிவிக்கும் புதிய மாவட்டமாக மயிலாடுதுறை இருக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளரும், தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளருமான செ.நல்லசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட செ. நல்லசாமி செய்தியாளரிடம் கூறியது:
86 ஆண்டுகால வரலாறு கொண்ட மேட்டூர் அணை முழுமையாக தூர்வாரப்படவில்லை. கடந்த ஆண்டு தூர்வாருவதாக கூறி பெயருக்கு சகதிகளை ஒரு சதவீதம்கூட அப்புறப்படுத்தவில்லை. மேட்டூர் அணையை தூர்வாரினால் இன்னும் 3 அடி நீரை அதிகமாக சேமிக்க முடியும். பாசன, வடிகால் ஆறுகள், குளங்கள், ஏரிகளை தூர்வாரி மழைநீரை சேமித்தால் தமிழகத்தின் தண்ணீர் பிரச்னைகளை ஒரளவுக்கு சமாளிக்க முடியும்.
கள் போதை பொருள் என்று நிரூபித்துவிட்டால் தமிழ்நாடு கள் இயக்கம் கலைக்கப்படுவதோடு, நிரூபிப்பவருக்கு ரூ. 10 கோடி பரிசு வழங்கப்படும்.
உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் மாதத்தில் நடந்த இருப்பதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சிகளுடைய தலையீடு, குறுக்கீடு இல்லாமல் கட்சி சின்னங்கள் ஓதுக்கீடு செய்யாமல், சிற்றூராட்சி முதல் மாவட்ட பொறுப்பு வரை சுயேச்சை சின்னங்களை ஒதுக்கி தேர்தலை நடத்த வேண்டும். அப்போதுதான் நல்லவர்கள் வல்லவர்கள் ஒழுக்கமுள்ளவர்கள் அரசியலுக்கு அப்பால் நின்று பொறுப்புக்கு வரமுடியும்.
ஆங்கிலேயர்களால் அடையாளம் காட்டப்பட்ட 5 நகரங்களில் ஒன்று மயிலாடுதுறை. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருந்ததிலிருந்து மயிலாடுதுறை தனி மாவட்டக் கோரிக்கை உள்ளது.
மாவட்டத் தலைநகருக்கு செல்ல மற்றொரு மாவட்டம் வழியாகவோ, மற்றொரு மாநிலமான காரைக்கால் வழியாகவோ செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே, 36-ஆவது புதிய மாவட்டமாக தமிழக அரசு அறிவிப்பது மயிலாடுதுறையாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம் என்றார்.
முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் காவிரி டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஆறுபாதி கல்யாணம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.