அதிவேக ரோந்துப் படகுகளில் மீண்டும் கண்காணிப்புப் பணி
By DIN | Published On : 30th July 2019 06:55 AM | Last Updated : 30th July 2019 06:55 AM | அ+அ அ- |

நாகை கடல் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக தடைப்பட்டிருந்த அதிவேக ரோந்து படகுகள் மூலமான கண்காணிப்புப் பணி திங்கள்கிழமை மீண்டும் தொடங்கியது.
மும்பையில் நிகழ்ந்த தீவிரவாத ஊடுருவலுக்குப் பின்னர், கடலோரப் பாதுகாப்புக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதனடிப்படையில், நாகை மாவட்ட கடலோர கண்காணிப்புப் பணிகளுக்காக 2010-ஆம் ஆண்டில் கடலோரப் பாதுகாப்புக் குழுமத்துக்கு 2 அதிவேக ரோந்துப் படகுகள் வழங்கப்பட்டன. இந்த ரோந்துப் படகுகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்தன. இதனால், இந்தப் படகுகள் மூலமான கண்காணிப்பு தடைப்பட்டிருந்தது. இந்த நிலையில், பழுதடைந்த படகுகளை சீரமைக்க கடலோரப் பாதுகாப்புக் குழு கூடுதல் இயக்குநர் வன்னியப்பெருமாள் உத்தரவிட்டார். அதன்படி, நாகையில் கடந்த 2 ஆண்டுகளாக பழுதடைந்து நிறுத்தப்பட்டிருந்த 2 அதிவேக ரோந்துப் படகுகளும் சுமார் ரூ. 48 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டன. சீரமைக்கப்பட்ட இந்த படகுகள் மூலமான கடலோரக் கண்காணிப்புப் பணி நாகையிலிருந்து திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. கடலோரப் பாதுகாப்புக் குழும கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலிதீர்த்தான், காவல் ஆய்வாளர் ராஜா மற்றும் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் இந்த ரோந்துப் படகுகளில், கண்காணிப்புப் பணியை மேற்கொண்டனர்.
கண்காணிப்பு நீட்டிப்பு...
முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலிதீர்த்தான், முதல் கட்டமாக ஒரு ரோந்துப் படகு நாகையிலிருந்து வேளாங்கண்ணி வரையிலும், மற்றொரு ரோந்துப் படகு நாகையிலிருந்து நாகூர் வரையிலான பகுதிகளிலும் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்படும். அடுத்தடுத்த நாள்களில், இந்த ரோந்துப் படகுகளின் கண்காணிப்பு கோடியக்கரை வரை நீட்டிக்கப்படும் என்றார்.