Enable Javscript for better performance
தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பு: பயணிகள் அவதி- Dinamani

சுடச்சுட

    

    தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பு: பயணிகள் அவதி

    By DIN  |   Published on : 01st June 2019 10:10 AM  |   அ+அ அ-   |    |  

    சீர்காழி, மயிலாடுதுறை, சிதம்பரம் ஆகியப் பகுதிகளுக்குச் செல்லும் தனியார் பேருந்துகள் தாங்களாகவே பயணக் கட்டணத்தை உயர்த்தி வசூல் செய்வதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.
    சீர்காழி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் நாள்தோறும் வேலை நிமித்தமாக மயிலாடுதுறை மற்றும் சிதம்பரம் பகுதிகளுக்கு பேருந்து மூலம்  அதிகளவில் சென்று 
    வருகின்றனர். 
    சீர்காழியிலிருந்து மயிலாடுதுறை 20 கிலோ மீட்டர் தொலைவிலும், இதேபோல் சீர்காழியிலிருந்து சிதம்பரம்  20 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்த 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு தனியார் மற்றும் அரசுப் பேருந்துகளில் ரூ. 13 கட்டணம் அரசால் நிர்ணயம் செய்யப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
    இந்நிலையில், சில அரசுப் பேருந்துகள் விரைவுப் பேருந்து என பெயர் பலகை வைத்துக்கொண்டு 20 கிலோ மீட்டர் தூரமுள்ள மயிலாடுதுறை, சிதம்பரத்துக்கு ரூ. 17 வரை வசூல் செய்கின்றனர். விருப்பமுள்ள பயணிகள் விரைவு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் செலுத்தியும், சில பயணிகள் சாதாரணப் பேருந்துகளில் காத்திருந்து செல்கின்றனர். ஆனால், தனியார் பேருந்துகளில் கடந்த சில மாதங்களாக அரசு நிர்ணயித்துள்ள (20 கி.மீ தூரம்) ரூ.13 கட்டணத்தை தவிர்த்து ரூ.15 விலை நிர்ணயம் செய்து கூடுதலாக வசூல் செய்து வருகின்றனர். 
    சீர்காழியிலிருந்து மயிலாடுதுதை, சிதம்பரம் செல்லும் பயணிகளும், அதேபோல் சிதம்பரம், மயிலாடுதுறையிலிருந்து சீர்காழிக்கு வரும் பயணிகளும் இதுபோன்று தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பால் வேறுவழியின்றி பயணம் செய்து வருகின்றனர். சிலர் தனியார் பேருந்து நடத்துநர்களிடம் ஏன் கூடுதல் கட்டணம் வசூல் செய்கிறீர்கள் என கேட்டால் விருப்பம் இருந்தால் பேருந்தில் ஏறுங்கள் இல்லாவிட்டால் வழியில் இறங்கி வேற பேருந்துகளில் செல்லுங்கள் என அலட்சியமாக பதிலளிப்பதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். 
    இதுபோன்று கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் தனியார் பேருந்துகளில் வழங்கப்படும் பயணச்சீட்டில் பேருந்தின் பெயர் ஊர் ஏதும் அச்சிடப்படாமல் வெறும் பயணதூரத்துக்கான விலை மட்டும் நடத்துநரால் எழுதி தரப்படுகிறது. மேலும் சில தனியார் பேருந்துகள் வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் எச்சரிக்கையையும் மீறி மயிலாடுதுறையிலிருந்து சீர்காழி நகருக்கு வராமல் புறவழிச்சாலை வழியாக  சிதம்பரம் செல்கின்றனர். 
    இதுபோன்று, நகருக்குள் வராமல் செல்லும் பேருந்துகளில் மயிலாடுதுறையிலிருந்து சிதம்பரத்துக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணமான ரூ. 28 க்கு பதிலாக ரூ. 33 முதல் ரூ. 35 வரை பயணிகளிடம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. சீர்காழி நகருக்குள் வராமல் செல்வதால் அங்கு ஏறும் பயணிகளின் கட்டணங்களை கூடுதலாக மற்ற பயணிகளிடம் வைத்து வசூல் செய்துவிடுவதாகவும், புறவழிச்சாலை வழியாக குறைந்த நேரத்தில் வேகமாக செல்லும் பேருந்து என அலப்பரித்துக் கொண்டு செல்கின்றனர்.
    இவ்வாறு கூடுதல் பயணிகள் கட்டணம் வசூல் செய்வதை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் தனியார் பேருந்துகள் குறித்தும், புறவழிச்சாலை வழியாகச் செல்லும் தனியார், அரசுப் பேருந்துகள் குறித்தும் பொதுமக்கள் பயணிகள் புகார் தெரிவிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தொலைபேசி எண்களை அச்சிட்டு மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம் உள்ளிட்ட பகுதி பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
    இதுகுறித்து, மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அழகிரிசாமி கூறியது: தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் ஒவ்வொரு ஸ்டேஜ்க்கும் அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணங்களை தவிர கூடுதலாக கட்டணம் வசூல் செய்தால் திடீர் ஆய்வு செய்து மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp