Enable Javscript for better performance
விளைநிலங்களில் குழாய் பதிப்பை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்: திரைப்பட இயக்குநர் கௌதமன்- Dinamani

சுடச்சுட

    

    விளைநிலங்களில் குழாய் பதிப்பை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்: திரைப்பட இயக்குநர் கௌதமன் 

    By DIN  |   Published on : 01st June 2019 10:15 AM  |   அ+அ அ-   |    |  

    விவசாயிகளை அச்சுறுத்தி, எண்ணெய் எரிவாயு  திட்டங்களுக்காக விளைநிலங்களில் குழாய் பதிக்கப்பட்டு வருவதை, மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டும் என தமிழ்ப் பேரரசு கட்சித் தலைவரும், திரைப்பட இயக்குநருமான வ. கெளதமன் தெரிவித்தார்.
    நாகையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்தப் பேட்டி: நாகை மாவட்டம், முடிகண்டநல்லூர் கிராமத்தில் நெல் நடவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த விவசாய நிலங்களில், நில உரிமையாளர்களிடம் அனுமதி பெறாமல் அத்துமீறி காவல் துறையினரின் உதவியுடன் கெயில் நிறுவனம் குழாய் பதிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளை உடனடியாக  தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
    இந்நிலையில், குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கெயில் நிறுவனத்துக்கு ஆதரவாகச் செயல்பட்ட காவல் துறை மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். குழாய் பதிப்புக்கு பயன்படுத்தப்பட்ட கனரக வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். இதுதொடர்பாக நாகை ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனுக்கள்அளிக்கப்பட்டுள்ளன. மேலும், இதுதொடர்பாக தமிழக முதல்வரை சந்தித்து அவரிடமும் மனு அளிக்கப்படவுள்ளோம். 
    விவசாயிகளின் போராட்டத்துக்கு தீர்வுகாணாமல், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அச்சுறுவத்துவது கண்டனத்துக்குரியது. எண்ணெய், எரிவாயு திட்டங்களுக்காக குழாய் பதித்தல், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை  தமிழகத்தில் நிறைவேற்ற முயற்சித்தால் எண்ணிப்பார்க்க முடியாதபடி போராட்டம் முன்னெடுக்கப்படும். இதற்கான வாய்ப்பை அதிகார சக்திகள் உருவாக்கிவிடக்கூடாது.
     இந்தியாவின் சுதந்திரத்துக்காக போராடியவர்களில் அதிகமாக உயிரிழந்தவர்கள் தமிழர்கள். வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா 1967-இல் கூறினார். தமிழகம்  கடந்த 70 ஆண்டுகளாகவே அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. 1000 ஆண்டுகளுக்கு முன்னரே உலகில் உள்ள பாதி நாடுகளை கட்டியாண்ட  தமிழர்களுக்கு போராட்டம் என்பது புதிதல்ல. மாடுகளின் உரிமைக்காக ரத்தம் சிந்திய நாங்கள், மக்களையும், மண்ணையும் காக்க வெற்றி காணும் வரை போராடுவோம் என்றார் அவர்.
    முன்னதாக, நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ. விஜயகுமாரை சந்தித்து, முடிகண்டநல்லூர் கிராமத்தில் விவசாயிகளின் நிலங்களில் அத்துமீறி குழாய் பதிப்பு பணியை மேற்கொண்ட கெயில் நிறுவனம் மற்றும் அப்பணியில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி புகார் மனு அளித்தார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வ. கெளதமன் கோரிக்கை மனு அளித்தார்.
    அப்போது, காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச் செயலர் காவிரி வி. தனபாலன், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநிலப் பொதுச் செயலர் பி. ரவீந்திரன், விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி,  தமிழ்ப் பேரரசு கட்சி நாகை மாவட்டப் பொறுப்பாளர் வெங்கடேஷ்  ஆகியோர் 
    உடனிருந்தனர்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp