கட்டட இடிபாடு கழிவுகளை சாலையில் கொட்டினால் அபராதம்: நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
By DIN | Published On : 01st June 2019 10:07 AM | Last Updated : 01st June 2019 10:07 AM | அ+அ அ- |

சீர்காழி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கட்டட இடிபாடு கழிவுகளை சாலைகளில் கொட்டினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சீர்காழி நகராட்சி ஆணையர் அஜிதாபர்வீன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சுற்றுப்புறசூழல் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் மத்திய அரசு திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை முறைப்படுத்த சீர்காழி நகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் இயற்றியுள்ளது. அதனடிப்படையில், நகராட்சி அதிகார எல்லைக்குள்பட்ட பகுதிகளில் கழிவுகளை சேகரித்தல், சேமித்தல், தரம்பிரித்து எடுத்துச்செல்லுதல், செயலாக்கம் மற்றும் இறுதியாக்கம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சாலைகளை சுத்தமாகவும், கால்வாய் தங்குதடையின்றி செயல்படவும், நிலத்தடி நீர் மற்றும் சுற்றுப்புற காற்றின் தரம் மாசுபடுவதைத் தவிர்க்கவும் கட்டிட இடிபாடு கழிவுகளை சாலைகள் கால்வாய்கள் மற்றும் நீர் நிலைகளில் கொட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. சீர்காழி நகராட்சியில் பொதுமக்களிடமிருந்து சேகரமாகும் கட்டட இடிபாடு கழிவுகள் மற்றும் மின்னனு கழிவுகள்( இ-வேஸ்ட்) ஆகியவற்றை பொதுமக்கள் நகரில் இக்கழிவுகளுக்கென்று ஒதுக்கப்பட்ட மையங்களில் தாங்களே தங்களுடைய செலவில் ஒப்படைக்க வேண்டியது அவசியமாகிறது.
அதன்படி சீர்காழி நகராட்சியில் கட்டட இடிபாடு கழிவுகளை கொட்டுவதற்கு ஈசானியத்தெருவில் உள்ள கலவை உரக்கிடங்கு மற்றும் வசந்தம் நகர் பூங்காவிலும் மின்னனு கழிவுகளை ஈசானியத் தெருவில் உள்ள கலவை உரக்கிடங்கு மற்றும் கொள்ளிடம் முக்கூட்டு பூங்காவிலும் கொட்டுவதற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, மேற்கண்ட கழிவுகளை அதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டும் கொட்டவேண்டும். பிறஇடங்களில் கொட்டினால் கொட்டுவோர் மீது அபராதம் விதிக்கப்படும் எனவும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.