ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திமுகவும் தடுத்து நிறுத்தாவிட்டால் மக்கள் பாடம் புகட்டுவர்: திரைப்பட இயக்குநர் வ. கௌதமன்

ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை திமுகவும் தடுத்து நிறுத்தவில்லை என்றால் மக்கள்

ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை திமுகவும் தடுத்து நிறுத்தவில்லை என்றால் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று திரைப்பட இயக்குநர் வ. கௌதமன் கூறினார்.  
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள கரியாப்பட்டினம் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி கைது மற்றும் வழக்குப் பதிவு செய்ததால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை இயக்குநர் வ. கௌதமன் புதன்கிழமை சந்தித்து, போராட்டத்தின்போது காவல் துறையால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுப்பது தொடர்பான அடுத்தக்கட்ட நகர்வு குறித்தும் கேட்டறிந்தார். பின்னர், கரியாப்பட்டினம் - செண்பகராயநல்லூர் ரயில்வே சாலையோரம் 25 ஆண்டுகளுக்கு முன்பு எண்ணெய் நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆழ்துளை ஆய்வு கிணறு அமைக்கப்பட்டிருந்த வளாகத்தில் எஞ்சியுள்ள கட்டமைப்புகளை பார்வையிட்டு, செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 
திருவாரூர் மாவட்டம், திருக்காரவாசல் முதல் நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரையில் 474 சதுர கிலோ மீட்டரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த 2-ஆவது கட்டமாக மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மாநில அரசு அதை ஆதரித்துள்ளது. மண் வளங்களை கொள்ளையடிக்கும் திட்டம், மக்கள் கருத்தை அறியாமல் திட்டத்தை செயல்படுத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட கரியாப்பட்டினம் மக்கள் மீது காவல் துறை அத்து மீறியுள்ளது. 40 பெண்கள் உள்ளிட்ட பலர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்து அவமானப்படுத்தி, இன்னும் அவர்கள் கையெழுத்து போட அலைந்து கொண்டிருக்கிறார்கள்.  இப்பிரச்னையில், காவல் துறையின் நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது. குறிப்பாக டிஎஸ்பி ஸ்ரீகாந்த், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை அவதூறாக பேசியுள்ளார். இதுதொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையத்தை அணுகவுள்ளோம். பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக கொண்டு வரப்படும் எந்த திட்டங்களை இனியும் சகித்துக்கொள்ள முடியாது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இதுபோன்ற திட்டங்களை தடுத்து நிறுத்தினார். ஆனால், தற்போதைய அரசு அதற்கு நேர் மாறாக உள்ளது. 
திமுக மீது நம்பிக்கை வைத்து மக்களவைத் தேர்தலில் மக்கள் வாக்களித்து வெற்றி பெற வைத்துள்ளனர். இதைக்  கருத்தில் கொண்டு ஹைட்ரோ கார்பன், நீட் போன்றவைகளை திமுக தடுத்து நிறுத்த வேண்டும், இல்லையெனில்  மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றார் கௌதமன்.
அப்போது, கரியாப்பட்டினம் ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்புப்புக் குழு நிர்வாகிகள் சரவணமுத்து, நடராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி செந்தில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com