கீச்சாங்குப்பம் பள்ளியில் பொலிவுறு வகுப்புகள் திறப்பு
By DIN | Published On : 14th June 2019 10:50 AM | Last Updated : 14th June 2019 10:50 AM | அ+அ அ- |

நாகப்பட்டினம், ஜூன் 13 : நாகை, கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய பொலிவுறு வகுப்பறைகள் மற்றும் கணினி ஆய்வகம் ஆகியன வியாழக்கிழமை திறக்கப்பட்டன.
நாகையை அடுத்த கீச்சாங்குப்பத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சுனாமியில் கடும் பாதிப்புக்குள்ளான பள்ளி. சுனாமி சீற்றத்தில் இப்பள்ளி நிர்மூலமாக்கப்பட்டது. இப்பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 80 பேர் சுனாமி சீற்றத்தில் உயிரிழந்தனர்.
பின்னர், இப்பள்ளியின் வளர்ச்சிக்கு அரசு, மாவட்ட நிர்வாகம், புரவலர்கள், ஊர்மக்கள் என பல்வேறு தரப்பினரும் பல்வேறு வகையான உதவிகளை வழங்கினர். இதன் காரணமாக, இந்தப் பள்ளியின் மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்பட்டதுடன், 2015-ஆம் ஆண்டில் பள்ளியின் 8 வகுப்பறைகள் பொலிவுறு வகுப்புகளாக மேம்படுத்தப்பட்டன.
மாநில, மாவட்ட அளவில் பல்வேறு பரிசுகளைப் பெற்ற இப்பள்ளி, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றை பெற்றது. இந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலில், இப்பள்ளி மீண்டும் கடுமையான சீர்குலைவைச் சந்தித்தது. பொலிவுறு வகுப்புகள் அனைத்தும் பலத்த சேதத்துக்கு உள்ளாகின.
இதைத் தொடர்ந்து, இப்பள்ளியை மீண்டும் சீரமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, மக்கள் பங்களிப்புடன் அரசின் தன்னிறைவுத் திட்டம் மூலம் ரூ. 6 லட்சம் மதிப்பில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன. புயலால் சேதமடைந்த 8 பொலிவுறு வகுப்புகள் புனரமைக்கப்பட்டதுடன், கூடுதலாக 2 வகுப்பறைகள் தொடுதிரை வசதிகளுடன் கூடிய அதிநவீன பொலிவுறு வகுப்பறைகளாக மேம்படுத்தப்பட்டன. மேலும், 10 மடிக்கணினிகளுடன் கூடிய கணினி ஆய்வகமும் அமைக்கப்பட்டது.
இந்தப் பொலிவுறு வகுப்பறைகள் மற்றும் கணினி ஆய்வகம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ப. செல்வராஜ் கணினி ஆய்வகத்தையும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) கா. பிச்சைமொய்தீன் பொலிவுறு வகுப்பறைகளையும் திறந்து வைத்தனர்.
வட்டாரக் கல்வி அலுவலர் இரா. புகழேந்தி தலைமை வகித்தார். கிராம பிரமுகர்கள் ராஜேந்திரநாட்டார், செளந்தரராஜன், பள்ளித் தலைமை ஆசிரியர் இரா. பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரக் கல்வி அலுவலர் வீ. ராமலிங்கம், வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) டி. ஜெயந்தி மற்றும் ஆசிரியர்கள், புரவலர்கள் பங்கேற்றனர்.