நுண்ணீர் பாசனத் திட்ட கிராம முனைப்பு இயக்கம்
By DIN | Published On : 18th June 2019 07:52 AM | Last Updated : 18th June 2019 07:52 AM | அ+அ அ- |

குத்தாலம் வட்டம், மேக்கிரிமங்கலம் கிராமத்தில் நுண்ணீர் பாசனத் திட்ட கிராம முனைப்பு இயக்கம் அண்மையில் நடைபெற்றது.
ஆண்டுதோறும் மழை அளவு குறைந்து வருகிறது. இதனால், குறைந்த நீரைப் பயன்படுத்தி, அதிக மகசூலை பெறும் தொழில்நுட்பங்களை விவசாயிகள் அறிந்துகொள்ளும் வகையில் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.
அதன்படி, மேக்கிரிமங்கலத்தில் நடைபெற்ற நுண்ணீர் பாசனத் திட்ட கிராம முனைப்பு இயக்கத்துக்கு வேளாண் அலுவலர் ராஜன் தலைமை வகித்தார். அட்மா திட்ட மேலாளர் அரவிந்தன் வரவேற்றார். பயிற்சியில் வேளாண் இணை இயக்குநர் நாராயணசாமி பேசும்போது, "தேசிய நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டு நீர் பாசனம் அமைக்க நிதி உதவி செய்யப்படும்' என்றார்.
வேளாண்மை உதவி இயக்குநர் வெற்றிவேல், வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள், பயிற்சிகள், இடுபொருள்கள், பயிர் காப்பீடு திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறினார். இந்நிகழ்ச்சியில் தனியார் நிறுவனப் பிரதிநிதிகள் பங்கேற்று வேளாண் தொழில்நுட்பக் கருவிகளின் செயல்பாடுகளை விளக்கிக் கூறினர். இதில், வேளாண்மை உதவி அலுவலர்கள் கலையரசன், செந்தில், சங்கீதா, அலெக்ஸாண்டர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
இதேபோல் குத்தாலம் வட்டம், ஆலங்குடி கிராமத்திலும் நுண்ணீர் பாசனத் திட்ட கிராம முனைப்பு இயக்கம் நடைபெற்றது.