வாய்மேடு கூட்டுறவு சங்கத் தேர்தல்: 13 மாதங்களுக்குப் பிறகு வேட்புமனுக்கள் பரிசீலனை
By DIN | Published On : 18th June 2019 07:53 AM | Last Updated : 18th June 2019 07:53 AM | அ+அ அ- |

வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு வேளாண் கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான வேட்புமனுகள் பரிசீலனை 13 மாதங்களுக்குப் பிறகு நீதிமன்ற உத்தரவுபடி திங்கள்கிழமை நடைபெற்றது.
வாய்மேடு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்துக்கான தேர்தல் கடந்த ஆண்டு மே மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக 45 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
வேட்புமனுக்கள் பரீசிலனை செய்யப்படவேண்டிய நாளான மே 2- ஆம் தேதி தேர்தல் நடத்தும் அலுவலர் பணிக்கு வராத நிலையில் மே 3-ஆம் தேதி வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதே நேரத்தில் தேர்தல் நடத்த அறிவிக்கப்பட்ட நாளில் தேர்தல் நடத்துவது தொடர்பாக எவ்வித முன்னேற்பாடுகளும் செய்யப்படவில்லை.
இதனிடையே, தேர்தல் முறைகேடு தொடர்பாக திமுக தரப்பில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எல்.எஸ்.இ. பழனியப்பன் தலைமையிலான தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு கூட்டுறவு சங்கங்களுக்கான திருச்சி மத்திய மண்டல சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில் திங்கள்கிழமை (ஜூன் 17) 45 வேட்புமனுக்களும் மறு பரிசீலனை செய்யப்பட்டன.
தேர்தல் நடத்தும் அலுவலரான கூட்டுறவு சங்க சார் பதிவாளர் மாரியப்பன் மனுக்களை பரிசீலனை செய்தார். அப்போது, வேட்பு மனு தாக்கலுக்குப் பிறகு காலமாகி விட்ட இருவர் உள்ளிட்ட 7 பேரின் மனுக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. மற்றவர்களது மனுக்கள் ஏற்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் சங்கத்தின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது.
இதையொட்டி, கூட்டுறவு சங்க வளாகத்தில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.