வீட்டுமனைப் பட்டா கோரி திருநங்கைகள் மனு
By DIN | Published On : 18th June 2019 07:51 AM | Last Updated : 18th June 2019 07:51 AM | அ+அ அ- |

வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி திருநங்கைகள் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை கூறைநாடு, அண்ணா வீதி பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட திருநங்கைககள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் வாடகை வீடுகளிலும், காவிரிஆற்றங்கரையோரங்களில் குடிசைகள்அமைத்தும் வசித்து வருகின்றனர். பெட்டிக்கடை வைத்தல், ஆடு, மாடுகள் வளர்த்தல் ஆகிய சுயத்தொழில்களில் ஈடுபட்டு வரும் திருநங்கைகளுக்கு நிரந்தரக் குடியிருப்புகள் இல்லாமல் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகும் நிலை உள்ளது.
இதனால், மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த திருநங்கைகள் அனைவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி கடந்த சில வருடங்களாகவே நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.
இந்நிலையில், திருநங்கைகள் நலவாரியத்தின் நாகை மாவட்டத் தலைவி ஜெ. ஜோதிகா தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வந்த திருநங்கைகள் வீட்டு மனை பட்டா வழக்கக் கோரி மாவட்ட சமூக நலத் துறைஅலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
இம்மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட சமூக நலத் துறை அலுவலர் உமையாள், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இந்த மனவை அளிக்கும்போது, நாகை ஆலயம் பவுண்டேஷன் திட்ட மேலாளர் எஸ். சத்யபிரகாஷ், களப்பணியாளர் என். ராஜமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து திருநங்கை
ஜெ. ஜோதிகா கூறியது:
கடந்த 10 ஆண்டுகளாக வீட்டுமனைக் கேட்டு வருகிறோம். பெட்டிக்கடை , ஆடு, மாடு வளர்த்தல் போன்ற சுயத்தொழில்களையும் செய்து வரும் எங்களுக்கு நிரந்தரக் குடியிருப்பு இல்லாததால் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளோம். பிற மாவட்டங்களில் திருநங்கைகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளதுபோல் எங்களுக்கும் வீட்டு மனைப் பட்டா வழங்க தமிழகஅரசு மற்றும் நாகை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.