நாகை நகராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

நாகை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ. 11 கோடி மதிப்பில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை

நாகை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ. 11 கோடி மதிப்பில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாகை நகராட்சிக்குள்பட்ட அக்கரைக்குளத்தில் நீர்நிலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 3.15 கோடி மதிப்பில் நடைபெறும் குளம் மேம்பாட்டுப் பணி, கோட்டைவாசல் பகுதியில் ரூ. 1.36 கோடி மதிப்பில் நடைபெறும் பூங்கா மேம்பாட்டுப் பணி,  மூலதன மானிய நிதியின் கீழ் தாமரைக்குளத்தில் நடைபெறும் தடுப்புச்சுவர் கட்டும் பணி ஆகியவற்றை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்  மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையின் பின்புறம் மற்றும் நாகூரில் தலா ரூ. 70 லட்சம் மதிப்பில் நடைபெறும் நுண் உரக்குடில் மற்றும் சுற்றுச் சுவர் அமைக்கும் பணி, நாகூர் பகுதியில் ரூ. 4.4 கோடி மதிப்பில் நடைபெறும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி ஆகியவற்றை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின் போது, பணிகளை உரிய தரத்தில், உரிய காலத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் எனவும், தொடர்புடையத் துறைகளின் அலுவலர்கள் பணி நிலைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் ஆட்சியர் அறிவுறுத்தினார்.
ஆட்சியர் எச்சரிக்கை...
இந்த ஆய்வுகளுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர்,  "குடிநீர் தட்டுப்பாட்டைத் தவிர்க்க அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குடிநீர் குழாய் உடைப்புகளை சீரமைக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்தக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.  எந்தப் பகுதியிலாவது மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சப்பட்டால் தொடர்புடையோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். நாகை நகராட்சி ஆணையர் என்.ஆர். ரவிச்சந்திரன், நகராட்சிப் பொறியாளர் கே. ரவிச்சந்திரன், குடிநீர் வடிகால் வாரிய உதவிப் பொறியாளர் விக்னேஸ்வரி மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com