பள்ளிகளில் தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும்: தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

பள்ளிகளில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் பள்ளிகளுக்குத் தண்ணீர் வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.


பள்ளிகளில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் பள்ளிகளுக்குத் தண்ணீர் வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகை மாவட்டப் பொதுக் குழு கூட்டம் நாகையில் சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் நாகை மாவட்டத் தலைவர் சொ. மணிமாறன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மு. லெட்சுமிநாராயணன் கூட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
மாநிலச் செயற்குழு உறுப்பினர் கோ. ராமகிருஷ்ணன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் இரா. முத்துக்கிருஷ்ணன், க.கோ. சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணை செயலாளர்கள் இரா. நீலா, புவனேஸ்வரி, வட்டாரச் செயலாளர்கள் கி. பாலசண்முகம், அறிவழகன், க. சண்முகசுந்தரம், ஆன்ட்ரூஸ், முருகானந்தம்,  ஞானப்பிரகாசம் மற்றும் நகரத் தலைவர்கள், மாவட்ட, வட்டார, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : 
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துறை ரீதியிலான நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட்டு 22 நாள்களுக்கு மேலாகியும் பெரும்பாலான வகுப்புகளுக்குப் பாடப்புத்தகங்கள் வழங்கப்படாததைக் கண்டிப்பது. 2009-ஆம் ஆண்டுக்குப் பின்னர் டி.இ.டி தேர்வில் தேர்ச்சி பெற்று இடைநிலை ஆசிரியர்களாக பணியேற்ற சிலருக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்த ஊதிய நிர்ணயம் செய்யப்படாமல் உள்ளது குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் பரிசீலனை மேற்கொண்டு, புதிய ஊதியத்தை நிர்ணயிக்கக் கேட்டுக்கொள்வது.
கடும் வறட்சியின் காரணமாக பல பள்ளிகளில் குடிநீர் பற்றாக்குறையும், கழிப்பறை பயன்பாட்டுக்குத் தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் பள்ளிகளுக்குத் தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்தைக் கேட்டுக்கொள்வது  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com