தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி: மாணவர்களுக்குப் பாராட்டு
By DIN | Published On : 24th June 2019 10:27 AM | Last Updated : 24th June 2019 10:27 AM | அ+அ அ- |

பஞ்சாப் மாநிலம் பகுவாராவில் நடைபெற்ற தேசிய அளவிலான வில் வித்தை மற்றும் ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்ற மயிலாடுதுறை மாணவர்களை, மயிலாடுதுறை வருவாய் கோட்ட அலுவலர் இ. கண்மணி ஞாயிற்றுக்கிழமை பாராட்டினார்.
பஞ்சாப் மாநிலம் பகுவாராவில் அண்மையில் தேசிய மாணவர் ஒலிம்பிக் சங்கம் சார்பில், தேசிய அளவிலான 5-வது வில்வித்தை மற்றும் ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றன. இதில், தமிழகம், ஆந்திரா, கேரளா, உத்தரப்பிரதேசம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
6 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் 6 முதல் 25 வயது வரை வயது வாரியாக 12 பிரிவுகளாக தரம் பிரிக்கப்பட்டு வில்வித்தை மற்றும் ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதில் நாகை மாவட்ட மாணவர் ஒலிம்பிக் சங்கம் சார்பில், 44 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். சிறப்பாக விளையாடி 10மீட்டர், 30 மீட்டர், 50 மீட்டர் உள்ளிட்ட பிரிவுகளில், நாகை மாவட்ட மாணவ, மாணவிகள் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை பெற்றனர். ஸ்கேட்டிங், மற்றும் வில்வித்தை போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.
வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு, மயிலாடுதுறை தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. மாயூரம் ரோலர் ஸ்கேட்டிங் கிளப் தலைவர் என்.கார்த்திக் வரவேற்றார். வழக்குரைஞர் ராம.சேயோன், தொழிலதிபர் ஏஆர்சி.ஆர். அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு மாணவர் ஒலிம்பிக் கழக தலைவர் ஜெ.லிங்கராஜன் வாழ்த்துரை வழங்கினார். இதில் மயிலாடுதுறை வருவாய் கோட்ட அலுவலர் இ.கண்மணி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, பதக்கம் வென்ற மாணவ, மாணவிகளைப் பாராட்டினார். இந்திய விளையாட்டு அகாதெமி தலைவர் எஸ். ரவிச்சந்திரன் நன்றி தெரிவித்தார்.