திருக்குறள் முற்றோதல் பரிசு பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்

திருக்குறள் முற்றோதல் பரிசு பெற நாகை  பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர்  சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

திருக்குறள் முற்றோதல் பரிசு பெற நாகை  பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர்  சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  திருக்குறளின் அறக்கருத்துகளை இளம் வயதிலேயே மாணவர்கள் மனப்பாடம் செய்தால், அவை பசுமரத்தாணி போல் பதிந்து, நிலைத்த வாழ்வுக்கு வழிகாட்டும். அத்துடன் கல்வியறிவோடு, நல்லொழுக்கம் மிக்க மாணவர்களை உருவாக்க வழிவகுக்கும். இதைக் கருத்தில் கொண்டு 2018-2019- ஆம் ஆண்டு முதல் 1,330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்கள் 70 பேருக்கு திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு தலா ரூ .10 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றுடன்  வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், திறனறி குழுவினரால் திறனாய்வு செய்யப்பட்டு, தகுதியானவர்கள் பரிசு பெறுவதற்கு பரிந்துரைக்கப்படுவர். மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கும் தமிழ் வளர்ச்சித் துறையினரால் திறனாய்வு  நடத்தப்படும்.
விதிமுறைகள்: 1,330 குறட்பாக்களையும் முழுமையாக ஒப்பிக்கும் திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும். இயல் எண், பெய ர், அதிகாரம் எண், பெயர், குறள் எண், பெயர் போன்றவற்றை தெரிவித்தால் அதற்குரிய திருக்குறளைக் கூறும் திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், சிறப்புகள், திருவள்ளுவரின் சிறப்புப்பெயர்கள் ஆகியவைகள் தெரிந்திருத்தல் அவசியம். நாகை மாவட்ட பள்ளிகளில் பயில்பவராக இருக்க வேண்டும். அரசு,  அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கு பெறலாம். தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படும் இப்பரிசினை பெற்றவராக இருத்தல் கூடாது. திருக்குறளின் பொருள் அறிந்திருப்பின் கூடுதல் தகுதியாகக் கருதப்படும். திருக்குறள் முற்றோதும் திறன்படைத்த மாணவர்கள் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் 3-ஆம் தளத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். 04365-251281 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களை அறியலாம்  என ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com