பருத்தி விலை குறைவு: விவசாயிகள் கவலை: திருமருகல் பகுதியில் அறுவடை தீவிரம்
By DIN | Published On : 28th June 2019 08:36 AM | Last Updated : 28th June 2019 08:36 AM | அ+அ அ- |

திருமருகல் ஒன்றியத்தில் பருத்தி அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால், பருத்தி விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை நம்பியும், பருவமழையை நம்பியும் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. குறுவை, சம்பா என 2 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் சரிவர கிடைக்காததால் வடகிழக்குப் பருவமழையை நம்பி சம்பா சாகுபடி மட்டுமே செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டுகளில் வடகிழக்குப் பருவமழையும் பொய்த்து போனதால் டெல்டா மாவட்டங்கள் அனைத்துமே வறண்டு போனது. இதனால், சம்பா சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் நெற்பயிர்கள் கருகின. அதைத் தொடர்ந்து சில விவசாயிகள் மின்மோட்டார் மூலம் பருத்தி சாகுபடி செய்தனர்.
திருமருகல் ஒன்றியத்தில் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் செய்யப்பட்டிருந்த சம்பா சாகுபடி தண்ணீர் இன்றி வறட்சியால் கருகி போனது. அதைத் தொடர்ந்து திருமருகல் ஒன்றியத்தை சேர்ந்த இரவாஞ்சேரி, குத்தாலம், நரிமணம், ஆலத்தூர்,திருமருகல், திருப்பயத்தங்குடி, பில்லாளி, விற்குடி, வாழ்குடி, கங்களாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மின்மோட்டார் வைத்து 600 ஏக்கரில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்திருந்தனர். தற்போது, சாகுபடி செய்யப்பட்ட பருத்தி அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், பருத்தி விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கடந்த மாதம் ஒரு கிலோ பருத்தி ரூ 50-க்கு விற்பனையானது. தற்போது, ரூ 42-க்கு விற்பனை ஆகிறது. எனவே, விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.