ஆன்மிகம் கலந்த உடற்பயிற்சி சிந்தனையை வலுப்படுத்தும்: தருமபுரம் ஆதீன இளைய சந்நிதானம் அருளாசி
By DIN | Published On : 04th March 2019 06:16 AM | Last Updated : 04th March 2019 06:16 AM | அ+அ அ- |

ஆன்மிகம் கலந்த உடற்பயிற்சி உடல் நலத்துடன், சிந்தனையையும் வலுப்படுத்தும் என்று, மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 8-ஆம் வகுப்பு மாணவரின் யோகா உலக சாதனை நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன இளைய சந்நிதானம் அருளாசி வழங்கினார்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஆர். மிஷாம். இவர், "கண்ட பேருண்டாசனம்' என்ற யோகாவை உலக சாதனை முயற்சியாக 45 நிமிடங்கள் மேற்கொண்டார். கண்ட பேருண்டாசனம் என்பது தரையில் வயிற்றுப்பகுதி படுமாறு படுத்த நிலையில், உடம்பை முன்னோக்கி வளைத்து செய்யும் ஆசனம் ஆகும். இதற்கு முன்னர், இந்த ஆசனத்தை 15 நிமிடங்கள் நிகழ்த்தியதே உலக சாதனையாக இருந்தது. பள்ளி அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாணவரின் தாயார் சுலோச்சனா ராஜேந்திரன் வரவேற்றார். பள்ளி முதல்வர் பி. ராஜேந்திரன், தற்சார்பு பசுமை கிராமங்கள் இயக்க தேசிய அமைப்பாளர் ஆறுபாதி ப.கல்யாணம் உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினர்.
நோபல் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பாளர் மற்றும் தீர்ப்பாளர் எல். அரவிந்த், துணை தீர்ப்பாளர் எப். ஜெயக்குமார் ஆகியோர் மாணவர் மிஷாமுக்கு, உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழை வழங்கினர்.
நிகழ்ச்சியில், தருமபுரம் ஆதீன இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக சுவாமிகள் பங்கேற்று, அருளாசி வழங்கிப் பேசியது: யோக கலைக்கு மூலகர்த்தா திருமூலர். யோக பயிற்சி செய்வதால் நல்ல சிந்தனைகள் உருவாகி, ஒழுக்கம் மேலோங்கும். குழந்தைகள் மாணவப் பருவத்திலேயே அறிந்து கொள்ளும் வகையில், யோகாவைப் பள்ளிகளில் பாடமாக்க வேண்டும். பாரத பிரதமர் யோகாவுக்கு முக்கியத்துவம் அளித்ததைத் தொடர்ந்து, தற்போது இந்தியாவில் பெரும்பான்மையானோர் யோகா செய்ய தொடங்கியுள்ளனர். உலக நாடுகளும் தற்போது யோகாவைப் பின்பற்றுகின்றன. உடற்பயிற்சி இல்லாமல் உயிர் வளர்ச்சி பெறாது. அந்த உடற்பயிற்சியானது, ஆன்மிகம் கலந்த நிலையில் இருந்தால், உடல் நலத்தோடு, சிந்தனையும் வலுப்பெறும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற பேராசிரியை எம். சாவித்திரி, விவசாயி எஸ்.சண்முகநாதன், யோகா ஆசிரியர் டிஎஸ்ஆர்.கணேசன், மயிலாடுதுறை சேம்பர் ஆஃப் டிரேடர்ஸ் தலைவர் சி.செந்தில்வேல் மற்றும் யோகா பயிற்றுநர்கள், யோகா ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.சென்னை எஸ்.திருநாவுக்கரசு நன்றி தெரிவித்தார்.