இரண்டரை அடி உயரமுள்ள மாற்றுத் திறனாளி மாணவிக்கு இருசக்கர வாகனம்

மயிலாடுதுறை அரசு கல்லூரியில் படிக்கும் இரண்டரை அடி உயரமுள்ள மாற்றுத் திறனாளி மாணவி பாரதியை 18

மயிலாடுதுறை அரசு கல்லூரியில் படிக்கும் இரண்டரை அடி உயரமுள்ள மாற்றுத் திறனாளி மாணவி பாரதியை 18 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிக்கு அவரது தாயார் தூக்கிச் சென்றுவருவது குறித்து அறிந்த கரூரைச் சேர்ந்த "இணைந்த கைகள்' உயிர்காக்கும் சேவை அமைப்பு, அவருக்கு இருசக்கர வாகனம் வழங்கியுள்ளது.
நாகை மாவட்டம், குத்தாலம் வட்டம் மேக்கிரிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி- தேவகி தம்பதிக்கு கடைசி மகளாகப் பிறந்தவர் பாரதி. இவர், வளர்ச்சி இல்லாமல் இரண்டரை அடி உயரத்துக்கும் குறைவான நிலையில் உள்ள மாற்றுத் திறனாளியாக உள்ளார். தற்போது, 18 வயது நிரம்பிய பாரதி, மயிலாடுதுறையில் உள்ள ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு பி.ஏ. பொருளாதாரம் பயின்று வருகிறார்.
பாரதி குள்ளமான மாற்றுத் திறனாளியாக உள்ளதால், அவரது வாழ்வாதாரத்துக்காக அவரை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் அவரது தாயார் தேவகி,  பாரதியை பள்ளியில் சேர்த்தது முதல் தற்போது கல்லூரியில் படிக்கும் நாள்கள் வரை 18 ஆண்டுகளாக தினமும் தனது இடுப்பில் தூக்கிச் சென்று படிக்க வைத்து வந்தார். இதற்காக கல்லூரி நாள்களில் தினமும் காலை 7.30 மணிக்கு வீட்டிலிருந்து பாரதியை தூக்கிக்கொண்டு, அரசுப் பேருந்தில் பயணித்து 18 கி.மீ. தூரத்தில் உள்ள கல்லூரியில் விட்டுவிட்டு, மாலை வரை அங்கேயே காத்திருந்து திரும்ப அழைத்து செல்கிறார் அவரது தாயார் தேவகி.
இந்நிலையில், இருசக்கர வாகனம் இருந்தால் தனது மகளை சிரமமின்றி முழுமையாக படிக்க வைக்கமுடியும் என்றும், இதற்கு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நலச் சங்கம் உதவ வேண்டும் என்றும் தேவகி கோரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதையறிந்த கரூரில் உள்ள "இணைந்த கைகள்' உயிர்காக்கும் சேவை அமைப்பினர் மாற்றுத் திறனாளி மாணவி பாரதிக்கு புதிய இருசக்கர வாகனம் வாங்கித் தந்துள்ளது. அந்த அமைப்பின் தலைவர் சாதிக் அலி, செயலாளர் சலீம் ஆகியோர் புதிய இருசக்கர வாகனத்தை பாரதி குடும்பத்தினரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனர். அப்போது, தாயின் உதவியுடன் படிக்கும் மாணவி பாரதிக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று அந்த அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.  சமூக அமைப்பின் உதவிக்கு நன்றி தெரிவித்த பாரதி, சட்டம் படித்து வழக்குரைஞராகி சமூகத்துக்கு சேவையாற்ற உள்ளதாக தெரிவித்தார்.  இந்நிகழ்ச்சியில் அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் நலச் சங்க மாவட்டப் பொருளாளர் ஆசிரியர் தாமரைச்செல்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com