கஜா புயல்: சிறப்பாக பணியாற்றிய மின்வாரிய ஊழியர்கள் 5 பேருக்கு விருது
By DIN | Published On : 04th March 2019 07:49 AM | Last Updated : 04th March 2019 07:49 AM | அ+அ அ- |

கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் 5 பேருக்கு, நாகப்பட்டினம் சீ சிட்டி ஜேசீஸ் சங்கம் சார்பில் விருது வழங்கி, பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
நாகை வெளிப்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றிவருபவர்கள் மணிகண்டன், கார்த்தி, ராஜேந்திரன், தமிழ்மாறன், ராஜேந்திரன். இவர்கள் 5 பேரும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் சிறப்பாக ஈடுபட்டனர்.
இவர்களது இந்தப் பணியைப் பாராட்டி நாகப்பட்டினம் சீ சிட்டி ஜேசீஸ் சங்கம் சார்பில் சிறந்த சேவையாளர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
இதற்கான நிகழ்ச்சி நாகப்பட்டினம் சீ சிட்டி ஜேசீஸ் சங்கத் தலைவர் எஸ். பரணிதரன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இதில், ஜேசீஸ் சங்க மண்டல இயக்குநர் டி. அகஸ்தியன் பங்கேற்று மின் ஊழியர்கள் 5 பேருக்கும் விருதுகள் வழங்கியும், சால்வை அணிவித்தும் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் மின்வாரிய உதவிப் பொறியாளர் அருண்குமார், ஜேசீஸ் சங்கத்தைச் சேர்ந்த ஏ. எஸ். நிஜாம், வி. கோவிந்தராஜூலு, மணிகண்டன், ஸ்ரீராம், சுதாகர், வாசுதேவன், கிங்ஸ்லி, செயலர் பிரபு ஸ்ரீனிவாசன், பொருளாளர் சண்முகவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.