சீர்காழி புதிய பேருந்து நிலையம் புறக்கணிப்பு
By DIN | Published On : 04th March 2019 07:50 AM | Last Updated : 04th March 2019 07:50 AM | அ+அ அ- |

சீர்காழி புதிய பேருந்து நிலையம் வராமல் புறவழிச்சாலை வழியாக பெரும்பாலான பேருந்துகள் சென்றுவருவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சீர்காழி செங்கமேடு முதல் எருக்கூர் வரை சுமார் 8 கி.மீ., தூரம் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு, கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. புறவழிச்சாலை அமைக்கப்பட்டதால் நகரில் போக்குவரத்து நெருக்கடி குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்மறையாக நடந்துவருகிறது. காரணம், பெரும்பாலான பேருந்துகள் சீர்காழி புதிய பேருந்து நிலையம் வராமல், புறவழிச் சாலை வழியாக
செல்கின்றன. குறிப்பாக சிதம்பரம், மயிலாடுதுறை போன்ற ஊர்களிலிருந்து சீர்காழிக்கு வரும் பயணிகள் சீர்காழி புறவழிச் சாலையில் கோயில்பத்து ரவுண்டானா, சட்டநாதபுரம் ரவுண்டானா, பனமங்கலம் மூன்று சாலை சந்திப்புகளில் வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்படுகின்றனர்.
இதனால், அங்கிருந்து சீர்காழி நகருக்கு சுமார் 3 கி.மீ. தூரம் நடந்தோ அல்லது ஆட்டோவிலோ செல்ல நேரிடுகிறது. அதுவும் இரவு நேரங்களில் செல்லும் 90 சதவீத பேருந்துகள் சீர்காழி புறவழிச்சாலை வழியாகத்தான் செல்கின்றன.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், அரசியல்கட்சி பிரமுகர்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. எனவே நாகை மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், தனியார் பேருந்து உரிமையாளர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஒன்றுகூடி சீர்காழி நகருக்குள் அனைத்து பேருந்துகளும் வந்து செல்வதை உறுதி செய்யும் வகையில், பேருந்து நிலையம் வரும் பேருந்துகளுக்கு ஏதேனும் அடையாள சீட்டை (நகராட்சியில் பேருந்து நிலைய வாடகை சுங்கக் கட்டணம் வசூல் செய்வது போன்று) பெற்று மற்ற பேருந்து நிலையத்தில் உள்ள அதிகாரிகளிடம் காட்டி உறுதியளிக்கும் வகையில், நிரந்தர தீர்வு காண வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.