மண்டல விளையாட்டுப் போட்டி: பொறையாறு பள்ளி முதலிடம்
By DIN | Published On : 04th March 2019 07:50 AM | Last Updated : 04th March 2019 07:50 AM | அ+அ அ- |

மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டியில், பொறையாறு சர்மிளா காடஸ் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.
உலக திறனாய்வுத் திட்டத்தின்கீழ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தடகள போட்டிகளை நடத்தி, மாணவர்களின் திறன்களை ஊக்குவித்து வருகிறது. மாவட்ட அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற மாணவர்கள், மண்டல அளவிலான போட்டிக்குத் தேர்வாகினர். அதன்படி நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல விளையாட்டுப் போட்டிகள் திருவாரூரில் அண்மையில் நடைபெற்றன. இதில், பொறையாறு சர்மிளா காடஸ் எஸ்.எம். மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 11 பரிசுகளை வென்று முதலிடம் பிடித்தனர்.
மாணவர்கள் நிகேஷ், சாஜித், அரசன், முகமது அல் அஸ்பர், மணிகண்டன், பிரீதா, திலோத்தமி சித்ரா, ஸ்ரீ காயத்ரி, லின்சி ரீனா, சுவேதா, ஜூலியா ஆகியோர் ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில் பரிசுகளை வென்றனர். மேலும், மண்டல அளவிலான போட்டிகளில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலா ரூ.6,000 ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. திருவாரூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகுவேந்தன் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். பள்ளி முதல்வர் பாண்டியராஜன், நாகை மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, உடற்கல்வி ஆசிரியர்கள் கோவிந்தராஜ், ஹெலன் பெலிசிட்டா, மகாலெட்சுமி ஆகியோர் மாணவர்களைப் பாராட்டினர்.