சுடச்சுட

  


  பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து இளைஞர் பெருமன்றம், ஜனநாயக மாதர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் தமுமுக  சார்பில் நாகை, கீழ்வேளூர், திருக்குவளை ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன. 
  பொள்ளாச்சியில் இளம் பெண்களுக்குப் பாலியல் வன்கொடுமைகளை இழைத்த கும்பலைச் சேர்ந்த அனைவரையும் கைது செய்து, அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வலியுறுத்தியும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை உறுதியாகத் தடுக்க புதிய சட்டம் கொண்டுவர கோரியும் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
  இளைஞர் பெருமன்றம்...
  நாகை புதிய பேருந்து நிலையம் முன்பாக அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் மா. பிரபாகரன் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் வி. சரபோஜி கோரிக்கையை வலியுறுத்திப் பேசினார்.
  இளைஞர் பெருமன்ற மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.  மனோஜ்ராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் எஸ். காந்தி, மாவட்டப் பொருளாளர் ஏ. ரமேஷ் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
  மாதர் சங்கம்...
  நாகை மாவட்டம், தேவூர் கடைவீதியில் ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி. லதா தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் சுபாதேவி, ஒன்றியப் பொருளாளர் எஸ். அகிலா ஆகியோர் பேசினர். திருக்குவளை கடைவீதியில் ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி. லதா தலைமை வகித்தார். ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் வெங்கட்ராமன், ஒன்றியச் செயலாளர் விஜயேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  தமுமுக...
  தமுமுக சார்பில் நாகை புதிய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் ஏ.எம். ஜபருல்லா தலைமை வகித்தார். தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.பி. யூசுப், ஓ.எஸ். இப்ராஹிம் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர்.
  மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். ரபீக், தமுமுக மாவட்டச் செயலாளர் அப்துல்காதர் மற்றும் நிர்வாகிகள், சார்பு அமைப்புகளின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai