மன்னார்குடி அருகே விவசாயிகள் சாலை மறியல்

மன்னார்குடி அருகே பாசனத்துக்கான ஆழ்துளைக் கிணறு மின் மோட்டாருக்கு மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் செய்யப்படுவதாக கண்டனம்


மன்னார்குடி அருகே பாசனத்துக்கான ஆழ்துளைக் கிணறு மின் மோட்டாருக்கு மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் செய்யப்படுவதாக கண்டனம் தெரிவித்து, விவசாயிகள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்துள்ள உள்ளிக்கோட்டை துணை மின் நிலையத்துக்குள்பட்ட சம்மட்டிக்குடிகாடு கிராமத்தில், கடந்த ஆண்டு வீசிய கஜா புயலில் ஏராளமான மின்கம்பங்கள் சேதமடைந்தன. இதனால், குடியிருப்பு மற்றும் விவசாய மின் மோட்டார்களுக்கான மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக மின் ஊழியர்கள் இரவு- பகல் பாராது மேற்கொண்ட சீரமைப்புப் பணியால் மின் விநியோகம்  சீரானது.
இந்நிலையில், சம்மட்டிக்குடிகாடு பகுதியில் விவசாயி மு.பாரதி வயலில் உள்ள ஆழ்துளைக் கிணறு மின் மோட்டாருக்கு கடந்த 3  மாதங்களாக மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இதனால், அவரது நிலம் மற்றும் அந்த ஆழ்துளைக் கிணற்றிலிருந்து பாசனம் பெறும் மற்ற விவசாயிகளின் நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் நீரின்றி கருகி வருகின்றன.
 இதுகுறித்து, உள்ளிக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் முறையிட்ட போது, விவசாயி பாரதி வயலுக்கு மின் கம்பிகள் ஆர். இந்திரா என்பவரது வீட்டின் வழியாக இணைப்புக் கொடுக்க வேண்டியுள்ளது என்றும், இதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவிப்பதால் மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவித்தனராம்.
இதைக் கண்டித்தும்,  ஆழ்துளை கிணறு மின் மோட்டாருக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வலியுறுத்தியும் மன்னார்குடி- பட்டுக்கோட்டை பிரதான சாலையில் சம்மட்டிக்குடிகாடு பேருந்து நிறுத்தம் அருகே விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த பரவாக்கோட்டை காவல் ஆய்வாளர் உஷாநந்தினி, இளநிலை மின் பொறியாளர் ராஜகோபால் உள்ளிட்டோர் நிகழ்விடத்துக்கு வந்து, விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஆழ்துளைக் கிணறு மின் மோட்டாருக்கு விரைவில் மின் இணைப்புக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதையடுத்து விவசாயிகள் மறியலை விலக்கிக்கொண்டனர்.
இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com