அரசு வீடு கட்டும் பயனாளிகளுக்குத் தட்டுப்பாடின்றி சிமென்ட் வழங்கக் கோரிக்கை

சீர்காழி ஒன்றியத்தில் அரசு வீடு கட்டும் பயனாளிகளுக்குத் தட்டுப்பாடின்றி சிமென்ட் வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீர்காழி ஒன்றியத்தில் அரசு வீடு கட்டும் பயனாளிகளுக்குத் தட்டுப்பாடின்றி சிமென்ட் வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் திருவெண்காடு, பூம்புகார், திருவாலி, நாங்கூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 37 ஊராட்சிகள் உள்ளன. குடிசைகளே இல்லாத தேசத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின்கீழ், ரூ.2 லட்சம் மதிப்பில் கான்கிரீட் வீடுகள் ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் கட்டித்தரப்பட்டு வருகின்றன. இதேபோல், தமிழக அரசு பசுமை வீடுகள் திட்டத்தின்கீழும் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. நிகழாண்டு பசுமை வீடுகள் திட்டத்தின்கீழ், 240 வீடுகளும், பிரதமரின் திட்டத்தின்கீழ் சுமார் 400 வீடுகளும் கட்ட ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் சம்பந்தபட்ட பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, ஊரக வளர்ச்சித்துறை மூலம் சிமென்ட், கம்பிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது பயனாளிகள் தங்களுடைய வீடுகளைக் கட்டத் தொடங்கியுள்ளனர். ஆனால் கடந்த இரண்டு மாதமாக சிமென்ட் விநியோகிக்கப்படாததால், கட்டுமானப் பணிகள் தடைபட்டுள்ளன. பயனாளிகள் சிமென்ட் கோரி தினந்தோறும் ஒன்றிய அலுவலகத்துக்கு சென்று வருகின்றனர். மேலும்,  அங்கன்வாடி கட்டடங்கள், கழிவறை கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் சிமென்ட் விநியோகம் தடைபட்டுள்ளது.
இதுகுறித்து பயனாளிகள் கூறுகையில், மார்ச் மாதத்துக்குள் வீடுகளைக் கட்டி முடிக்க வேண்டும் என அதிகாரிகள் கூறியதன்பேரில், குடிசை வீடுகளை இடித்துவிட்டு, கான்கிரீட் வீடு கட்டும் பணியைத் தொடங்கிவிட்டோம். ஆனால், கடந்த இரண்டு மாதமாக சிமென்ட் வராத காரணத்தால், வீடு கட்டும் பணிகளை நிறுத்திவைத்துள்ளோம். ஏற்கெனவே மணல் தட்டுப்பாடு நிலவும் நிலையில், சிமென்ட் விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளதால் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளோம். எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சிமென்ட் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com