Enable Javscript for better performance
அரசு இசைப் பள்ளியில் தமிழிசை விழா- Dinamani

சுடச்சுட

    

    சீர்காழியில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளியில் தமிழிசை விழா உள்ளிட்ட முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    கலை பண்பாட்டுத் துறை, மண்டல கலை பண்பாட்டு மையம், நாகை மாவட்ட அரசு இசைப் பள்ளி ஆகியன சார்பில், தமிழிசை விழா, இசைப்பள்ளி ஆண்டு விழா, சிறுவர் மன்ற விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
    கலை பண்பாட்டுத் துறை இணை இயக்குநர் இரா. குணசேகரன் தலைமை வகித்தார். அரசு இசைப்பள்ளிகள் கலை இயல் அறிஞர் பூர்ண புஷ்கலா தமிழிசை விழாவைத் தொடங்கி வைத்தார். திருக்குறள் பண்பாட்டுப் பேரவை பொருளாளர் எம். முத்துக்கருப்பன், தமிழாசிரியர் தருமை எஸ். சிவா, பேராசிரியர் எஸ். ஜெயராமன் ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினர்.  
    பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இரா. குணசேகரன் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கி பேசுகையில், தமிழிசை ஆர்வலர்கள் தமிழிசை மூவர் மணிமண்டபத்தில் இதுபோன்ற இசை விழாக்களை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். கலை  பண்பாட்டுத் துறையும் அதைத்தான் விரும்புகிறது. மாதந்தோறும் தமிழிசை மூவர்  மண்டபத்தில் மாவட்ட அரசு  இசைப்பள்ளி சார்பில் விழா நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற தமிழிசை விழா, முப்பெரும் விழாக்கள் மணிமண்டபத்தில் நடத்துவதற்கு வரும் காலங்களில் ஆவன செய்யப்படும் என்றார்.
     இதைத்தொடர்ந்து, தேவார இன்னிசை நிகழ்ச்சி, திருமுறை கலாநிதி குமாரவயலூர் ஞா. பாலசந்தர் பாட்டு, வெங்கடேசன் வயலின், சிவகுமார் மிருதங்கம் நிகழ்ச்சிகளும், அண்ணாமலை பல்கலைக்கழக இசைத்துறை பரத நாட்டிய மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றன. மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவர்களின் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள், சவகர் சிறுவர் மன்ற மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், இசை, சிறப்பு நாகசுரம், தவில் உள்ளிட்ட இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.   இசைப்பள்ளி தலைமை ஆசிரியை ந. கலையரசி வரவேற்றார். மிருதங்க ஆசிரியர் டி. முருகேசன் நன்றி கூறினார். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai