Enable Javscript for better performance
அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் அகற்றம்- Dinamani

சுடச்சுட

    

    நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள், கொடிமர கல்வெட்டுகளை அகற்றும் பணிகள் புதன்கிழமை நடைபெற்றன.
    மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தவுடன், அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள் மூடப்பட்டன. அடுத்தக் கட்டமாக, அரசியல் கட்சிகளின் கொடிகள் அகற்றப்பட்டன.
    இந்த நிலையில், அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் மற்றும் கல்வெட்டுடன் கூடிய பீடங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் மற்றும் கொடிமர பீடங்களை அகற்றும் பணி நாகை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெறுகிறது. 
    இதன்படி, நாகை வெளிப்பாளையம், தம்பித்துரை பூங்கா, அரசுப் போக்குவரத்துக்கழகப் பணிமனை மற்றும் வெளிப்பாளையம்,  காடம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்த கட்சிகளின் கொடிமர கல்வெட்டுகள், நகராட்சி அலுவலர்கள் மேற்பார்வையில், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டன.
    பொறையாறில்...
    பொறையாறு, மார்ச் 27:  பொறையாறு, ராஜீவ்புரம், காட்டுச்சேரி, காழியப்பநல்லூர், ஆக்கூர் செம்பனார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பம் மற்றும் கல்வெட்டுகளை தரங்கம்பாடி வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் அகற்றினர். 
    குத்தாலத்தில்....
    குத்தாலம், மார்ச் 27: குத்தாலம் பேரூராட்சிக்குள்பட்ட 15 வார்டுகளிலும் செவ்வாய்க்கிழமை பேரூராட்சி செயல் அலுவலர் கி. மோகனரங்கன் தலைமையில் அலுவலர்கள் 55 கட்சிக் கொடி மரங்களை அகற்றினர். பீடங்களை அகற்ற முற்பட்டபோது அதிமுக, திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து பீடங்களை அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. புதன்கிழமை மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை, குத்தாலம் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட போலீஸாரின் பாதுகாப்போடு பீடங்களை அகற்றினர்.
     இதேபோல், குத்தாலம் பகுதியில் ஒன்றிய ஆணையர் அ.ஜான்சன் தலைமையில் அலுவலர்கள் 65 கட்சிக் கொடிமரங்கள் மற்றும் பீடங்களை அகற்றினர். இதேபோல், பாலையூர் பகுதியில் குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர் அசோக்குமார் தலைமையில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை 72 கட்சிக் கொடிமரங்கள் மற்றும் பீடங்களையும், புதன்கிழமை 60 கட்சிக் கொடி மரங்கள் மற்றும் பீடங்களையும் அகற்றினர். பெரம்பூர் சரகத்துக்குள்பட்ட கிராமங்களில் தேர்தல் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை 77 கட்சிக் கொடிமரங்கள் மற்றும் பீடங்களையும், புதன்கிழமை 55 கட்சிக் கொடிமரங்கள் மற்றும் பீடங்களையும் அகற்றினர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai