சோதனை அடிப்படையில் சாகுபடி செய்யப்பட்ட வெள்ளரியில் நல்ல மகசூல்: விவசாயி மகிழ்ச்சி

திருக்குவளை அருகே வலிவலத்தில் சோதனை அடிப்படையில் சாகுபடி செய்யப்பட்ட வெள்ளரி, நல்ல விளைச்சலைத் தருவதாகவிவசாயி மகிழ்ச்சி தெரிவித்தார்.

திருக்குவளை அருகே வலிவலத்தில் சோதனை அடிப்படையில் சாகுபடி செய்யப்பட்ட வெள்ளரி, நல்ல விளைச்சலைத் தருவதாக
விவசாயி மகிழ்ச்சி தெரிவித்தார்.
 காவிரி கடைமடை பகுதியான நாகை மாவட்டத்தில் விவசாயிகள் குறுவை, சம்பா சாகுபடிக்கு பிறகு உளுந்து, பச்சைப்பயறு உள்ளிட்ட பயறு வகை சாகுபடி மேற்கொள்வர்.
இந்நிலையில் வலிவலம் வடபாதி பகுதியில் விவசாயி சுந்தரம் என்பவர் சோதனை முயற்சியாக, நிகழாண்டு தனது நிலத்தில் வெள்ளரி சாகுபடி செய்துள்ளார். ஏற்கெனவே போதிய மழை இல்லாதது, காவிரியில் உரிய தண்ணீர் கிடைக்காதது, நீர் நிலைகளை தூர்வாராதது போன்ற காரணங்களால் பாசனத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில்,  கோடை காலத்தில் குறைந்த அளவு நீரில் வெள்ளரி செழித்து வளரும் என்பதால் சோதனை அடிப்படையில் வெள்ளரி சாகுபடியை மேற்கொண்டுள்ளதாக கூறிய அவர், இதற்காக, தனது 100 குழி நிலத்தில் 50 குழிகளை ஓர் அடி ஆழத்துக்குத் தோண்டி,  அதில் நாட்டு உரம் ( உலர்ந்த மாட்டுச்சாணம்) பரப்பி அதன் மீது ஆற்று மணல் கொண்டு நிரப்பி வெள்ளரி விதைகளை நட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பின்னர், இவற்றுக்கு காலை அல்லது மாலை என நாள் ஒன்றுக்கு ஒரு முறை ஆற்றிலுள்ள ஊற்று நீரினை மோட்டார் மூலம் இரைத்து, பராமரித்து வருகிறார். 30  நாள்களில் பூத்த வெள்ளரிக் கொடிகள்,  40-ஆவது நாள் முதல் பிஞ்சுகள் விடத் தொடங்கின. 
இதேபோல், வெள்ளரி பழத்துக்கான ரகமும் சாகுபடி செய்துள்ளார். இதில் வெள்ளரிகள் காய்த்து, பழுக்கத் தொடங்கியுள்ளன. மேலும், வெண்டை மற்றும் வயலின் ஒரு பகுதியில் தர்ப்பூசணி, பருத்தி போன்ற பயிர்களையும் சாகுபடி செய்துள்ளார். 
இதுகுறித்து,  விவசாயி சுந்தரம் கூறியது: வெள்ளரி விதைகளை நாகை அருகே உள்ள பறவை கிராமத்தில் வாங்கிவந்து, எனக்குத் தோன்றிய யோசனைப்படி இயற்கை உரமிட்டு, நட்டு பராமரித்து வந்தேன். தற்போது, வெள்ளரிக் கொடிகள் நன்கு வளர்ந்து, ஓரளவுக்கு வருமானம் கிடைக்கிறது.  நாள் ஒன்றுக்கு சுமார் ரூ. 250 முதல் 350 வரை வெள்ளரி பிஞ்சுகள் விற்பனையாகின்றன. நான் எதிர்பாத்த அளவுக்கு வருவாய் கிடைப்பதால், அடுத்த ஆண்டு ஓர் ஏக்கர் அளவில் வெள்ளரி பயிரிட முடிவு செய்துள்ளேன் என்றார் அவர்.
வங்கிக் கடன் வழங்க கோரிக்கை: சோதனைக்காக பயிரிடப்பட்ட வெள்ளரி நல்ல விளைச்சல் தருவதால் வரும் ஆண்டுகளில் இப்பகுதியில் வெள்ளரி சாகுபடியானது  களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது . இதனால், விவசாயிகள் வெள்ளரி பயிரை பாதுகாப்பதற்காக வேலி அமைக்கவும்,  நீர் பாய்ச்ச மோட்டார் உள்ளிட்ட உபகரணங்கள் வாங்குவதற்கும் அரசு வங்கிகளில் கடன் அளித்து உதவ வேண்டும் என்றும் அவர் கோரிக்கைவிடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com