நாகை செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் பெருமாள் அவதார உத்ஸவம் சனிக்கிழமை தொடங்கியது.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட 108 வைணவத் தலங்களுள் 19-ஆவது தலமாக விளங்குகிறது நாகை அருள்மிகு செளந்தரராஜப் பெருமாள் கோயில். ஆதிசேஷன், துருவன், சாலிசுக மன்னன் உள்பட தேவர்களும், முனிவர்களும், வழிபட்ட தலமாக விளங்குகிறது இத்தலம்.
மனுவின் பேரனும், அரச குமாரனுமான துருவன் குழந்தை பருவத்திலிருந்த போது, பெருமாளை நோக்கி தவமியற்றியதை மெச்சி, சித்திரை மாத மக நட்சத்திர நாளில் துருவனுக்குக் காட்சியளிக்க பெருமாள் இத்தலத்துக்கு எழுந்தருளினார் என்பது ஐதீகம்.
இந்த ஐதீகப்படி, ஆண்டு தோறும் இக்கோயிலில் பெருமாள் அவதார உத்ஸவம் 10 நாள்கள் கொண்டாடப்படுகிறது. இதன்படி, நிகழாண்டுக்கான உத்ஸவம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
காலை 10 மணிக்கு திருவடி திருமஞ்சனத்துடன் உத்ஸவம் தொடங்கியது. மாலை நிகழ்வாக கண்ணாடி ஊஞ்சலில் பெருமாள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர், செளந்தரராஜப் பெருமாள் வீதிப் புறப்பாடு நடைபெற்றது.
உத்ஸவத்தின் முக்கிய நிகழ்ச்சியாக கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி, துருவனுக்குக் காட்சியளித்த நிகழ்ச்சி மே 13-ஆம் தேதி நடைபெறுகிறது.