கடல் வழியாக இலங்கைக்கு கடத்தவிருந்த 34 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது
By DIN | Published On : 05th May 2019 03:15 AM | Last Updated : 05th May 2019 03:15 AM | அ+அ அ- |

நாகை மாவட்டம், வேதாரண்யத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்தவிருந்த 34 கிலோ எடையுள்ள கஞ்சாவை கடலோரக் காவல் நிலைய போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா மூட்டைகள் கடத்தவிருப்பதாக, வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கடலோரக் காவல் குழும துணைக் காவல் கண்காணிப்பாளர் கலிதீர்த்தான் மற்றும் வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீஸார், ஆறுகாட்டுத்துறை கடற்கரைப் பகுதிக்குச் சென்று, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, 2 மூட்டைகளுடன் அப்பகுதியில் காத்திருந்தவரைப் பிடித்து விசாரித்தனர்.
மேலும், அவர் வைத்திருந்த மூட்டைகளை சோதனையிட்டதில், தலா 2 கிலோ வீதம் 17 பொட்டலங்களில் 34 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து, அந்த நபரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் தஞ்சாவூர் மாவட்டம், தம்பிக்கோட்டை, சுந்தரம் காலனியைச் சேர்ந்த செல்லத்துரை மகன் பாலா என்கிற பாலமுருகன் (32) என்பதும் கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சாவை கடத்திச் செல்ல படகுக்காக காத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, பாலமுருகனை கைது செய்த போலீஸார், 34 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...