அச்சுறுத்தும் ஹைட்ரோ கார்பன்: அச்சத்தில் காவிரி டெல்டா விவசாயிகள்!

தமிழகத்தின் 75 சதவீத உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் உணவு கேந்திரமான காவிரி  டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முனைப்புக் காட்டி வருவதால்


தமிழகத்தின் 75 சதவீத உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் உணவு கேந்திரமான காவிரி  டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முனைப்புக் காட்டி வருவதால் டெல்டா விவசாயிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
வரலாற்று தடயங்கள் பரவி கிடக்கும் டெல்டா மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள், நீர்நிலைகள் அண்மைக்காலங்களாக ஆக்கிரமிக்கப்பட்டு வருவதால், நிலப்பரப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மணல் கொள்ளை, விளைநிலங்கள் வீட்டுமனைகளாக்கப்படுதல், கட்டுமானங்கள், இறால் பண்ணைகள், தொழிற்சாலைகள், சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் போன்றவைகளுக்காக செய்யப்படும் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து வருகின்றன.
தமிழகத்தின் தற்போதையை மக்கள் தொகை 7.25 கோடியாக இருக்கிறது. சில ஆண்டுகளில் மக்கள் தொகை மேலும் உயரும். தமிழகம்  தற்போதே உணவுத் தேவைக்காக ஆந்திரம்,  கர்நாடகம்,  ஹரியானா போன்ற பிற மாநிலங்களைச் சார்ந்திருக்கும் நிலை உள்ளதால், எதிர்காலத்தில் உணவுப் பஞ்சம் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
காவிரி ஆறு மூலம் பாசனம் பெறும் 81,155  சதுர கிலோ மீட்டர் பரப்பளவு விளைநிலங்களில் 43,856 சதுர கிலோ  மீட்டர் பரப்பளவுள்ள நிலங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இதில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மற்றும் காரைக்காலை  உள்ளடக்கிய காவிரி டெல்டா மாவட்டங்களின் மொத்த நிலப்பரப்பு 25 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் ஆகும். இதில் உற்பத்தியாகும் தானியங்கள்தான் தமிழகத்தின் 75 சதவீத உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது.
இந்நிலையில்தான் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்காக மேலும் விளைநிலங்களை கையகப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காவிரிப் படுகையில் நடைபெற்று வரும் ஓ.என்.ஜி.சி. நிறுவன திட்டப் பணிகளுக்காக விளைநிலங்கள் 1984 முதல்  கையகப்படுத்தப்படுவது தொடர்கிறது.
ஹைட்ரோ கார்பன்  திட்டத்துக்காக விழுப்புரம்  மாவட்டம் மரக்காணம் முதல் நாகை மாவட்டம் கோடியக்கரை வரை உள்ள பகுதிகளில் 5,094 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள நிலங்களுக்கு, முதல் சுற்று ஏலம் நடத்தப்பட்டுள்ளது. இதேபோல், மேலும் சில ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை கையக்கப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக  விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மரக்காணம்  முதல் கோடியக்கரை வரை உள்ள பகுதிகளில் 40 -க்கும் மேற்பட்ட இடங்களில் எண்ணெய் எரிவாயு கிணறுகள் அமைக்க ஒரு தனியார் நிறுவனத்துக்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், எண்ணெய் எரிவாயு கிணறுகளை அமைப்பதற்கானஆய்வுகளை மேற்கொண்டு, அதற்கான அறிக்கைகளை தாக்கல்  செய்யவும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
நீரியல் விரிசல் முறையில் எடுக்கப்படவுள்ள ஹைட்ரோ கார்பனை (நிலக்கரி, நாப்தா, பாறை எரிவாயு, பெட்ரோலியப் பொருள்கள் அடங்கிய வேதிப்பொருள்) எடுத்தால் எரிபொருள் தேவையை நாம் பூர்த்தி செய்து கொள்ள முடியும். எரிபொருளுக்கான இறக்குமதியும் கனிசமாக குறையும். இவற்றை எடுப்பதற்கு செலவு அதிகமாகும் என்பதால் ஏலங்களை நடத்தியுள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளதுடன், ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ளது. 
ஒப்பந்தங்களின்அடிப்படையில் எதிர்வரும் 15 ஆண்டுகளுக்கு பல்லாயிரம் கோடி டன் எரிபொருள்களை தனியார் நிறுவனங்கள் எடுக்கும். இதன்மூலம் கிடைக்கும் வருவாயை அரசு பங்கிட்டுக் கொள்ளும். விலை மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றுக்கான அதிகாரங்களை தனியார் நிறுவனங்கள் வைத்துக் கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது. 
கிருஷ்ணா, கோதாவரி படுகைகளைவிட,  காவிரிப் படுகையில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஒப்பந்த நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதால் இத்திட்டம் குறித்து காவிரி டெல்டா விவசாயிகள் பெரும் அச்சத்தில்  உள்ளனர். இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் விவசாய நிலங்கள் பாழ்படும், நிலத்தடி நீர் மாசுபடும், விவசாயிகள்அகதிகளாக்கப்படுவார்கள், உணவுப் பஞ்சம் ஏற்படும்  என்பது விவசாயிகள், விவசாய சங்கத்தினர், தன்னார்வ அமைப்பினர், கூலித் தொழிலாளர், அரசியல் கட்சியினர்,  வணிகர்கள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்தாக உள்ளது. மேலும்,  காவிரிப் படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும் எனவும்  அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போது நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலின்போது, தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும் தங்களது தேர்தல் அறிக்கைகளில் காவிரிப் படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண்  மண்டலமாக அறிவிக்கப்படும் என வாக்குறுதிகள் அளித்துள்ளன. மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரும் இதற்கான வாக்குறுதிகளை அளித்துள்ளனர். இது ஒருபுறம் இருந்தாலும், காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு தொடர்ந்து  முனைப்புக் காட்டி வருகிறது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் தமிழகத்தின் நிலைமை மேலும் மோசமடையும் என்பது விவசாயிகளின் கவலையாகும்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பி. ஆர். பாண்டியன் கூறியது: விளைநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்  திட்டங்களுக்கு எதிராக  2012 முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடை உத்தரவு   பெறப்பட்டுள்ளது. இதனிடையே, ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கான கிணறுகளை அமைப்பதற்கு ஆய்வுகளை செய்யவுள்ளது.
ஓ.என்.ஜி.சி. நிறுவனத் திட்டங்களுக்கு எந்த  இடத்தையும் கொடுக்க மாட்டோம். அதற்காக  நிலம் கொடா இயக்கத்தைத் தொடங்கியுள்ளோம்.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஹைட்ரோ  கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதியில்லை என  கொள்கை ரீதியான முடிவெடுத்து அறிவித்தார்.
தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிரான தீர்ப்புகளை வழங்கியுள்ளது. மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நிறைவேற்ற முனைப்புக் காட்டினால், அதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்.
காவிரி விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநில தலைவர் காவிரி வி. தனபாலன்: இயற்கை எரிவாயு திட்டங்களை காவிரி டெல்டாவில் நடைமுறைப்படுத்தக் கூடாது. மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் மக்களின் நன்மை கருதியே இருக்க வேண்டும். தமிழகத்தில் தேர்தல் விதிகள்அமலில் இருக்கும்போது, மக்களுக்கு சாதக, பாதகங்களை ஏற்படுத்தும் திட்டங்கள் குறித்த அறிவிப்பு ஏற்புடையதல்ல.
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு  தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. ஜெயராமன்: 
ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களால் காவிரிப் படுகை பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளது. ஓ.என்.ஜி.சி. திட்டப் பணிகளால் நிலமும், நிலத்தடி நீரும் மாசுபட்டு வருகிறது. காவிரிப் படுகையில் 40 எண்ணெய் கிணறுகளை அமைக்கவும், அதில் 634 வகையான ரசாயனங்களை பூமிக்குள் செலுத்தி நீரியல் விரிசல் முறையில் ஹைட்ரோ கார்பனை எடுக்க மத்திய அரசு ஆயத்தப் பணிகளை செய்து வருகிறது.
முதல் சுற்று ஏலத்தின்படி, மரக்காணம் முதல் வேளாங்கண்ணி வரை 5,094 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா,  ஓ.என்.ஜி.சி. ஆகிய நிறுவனங்களுக்கு  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது சுற்றில் திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் முதல் நாகை மாவட்டம்  கரியாப்பட்டினம் வரை 474  சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள நிலம் ஏலம் விடப்பட்டுள்ளது.
வறட்சி, வெள்ளம் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் காவிரி டெல்டா மாவட்டங்களில் படிப்படியாக விவசாயம் குறைந்து வரும் நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டம் நடைமுறைக்கு வந்தால், அதிலிருந்து வெளியேற்றப்படும் நச்சுக்களால் விளைநிலங்கள் முற்றிலும் அழியும், உணவு உற்பத்தி குறைந்து பட்டினிச்சாவு ஏற்படும். எனவே இத்திட்டம் கைவிடப்பட வேண்டும்.காவிரி டெல்டா மாவட்டங்களை பாôதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதுதான் கூட்டமைப்பின் பிரதான கொள்கை. மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்  எண்ணெய், எரிவாயு திட்டங்களுக்கு எதிராக கூட்டமைப்பு தொடர்ந்து போராடும்.
விவசாயி ஜெ. ரகுபதி: விளைநிலங்களையும், இயற்கையையும் தெய்வமாக வழிபடுபவதை  தொன்றுதொட்டு கடைபிடிப்பவர்கள் தமிழர்கள். விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு இத்திட்டம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் திட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த அரசு அனுமதியளிக்கக் கூடாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com