முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
கஜா புயலுக்குப் பிறகு காய்க்கத் தொடங்கிய தென்னை மரங்கள்: மகசூல் குறைவால் விவசாயிகள் கவலை
By DIN | Published On : 15th May 2019 08:51 AM | Last Updated : 15th May 2019 08:51 AM | அ+அ அ- |

திருக்குவளை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கஜா புயலில் தப்பிய தென்னை மரங்கள் தற்போது காய்க்கத் தொடங்கி உள்ளன. எனினும், மகசூல் குறைவால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பரில் வீசிய கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் திருக்குவளை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும்பாலான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதில் தப்பிய ஒருசில மரங்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது காய்க்கத் தொடங்கி உள்ளன. எனினும், அவற்றின் மகசூல் முன்பு போல் இல்லை என விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
அதாவது, கடந்த ஆண்டு வீசிய புயலில் தென்னை மரங்களின் நுனிப்பகுதியில் சுழல் காற்றானது தாக்கியதைத் தொடர்ந்து, அதில் உள்ள பூக்கள் அனைத்தும் கொட்டி மரங்கள் மீண்டும் பூக்கத் தொடங்கி காய்ப்பதற்கு ஏறத்தாழ ஐந்து மாதங்களுக்கு மேலாகின.
அவ்வாறு காய்க்கத் தொடங்கும் தேங்காய்கள் சிறிய அளவிலும், பெரும்பாலான தேங்காய்களில் மட்டை மட்டுமே இருப்பதாகவும் உள்ளே காய்கள் வளர்ச்சி இல்லாமல் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், இப்பகுதியில் உள்ள தென்னந்தோப்புகள் பெரும்பாலும் குத்தகைக்கு விடப்பட்டதால் அதைக் குத்தகைக்கு எடுத்த வியாபாரிகள் தற்போது நஷ்டம் ஏற்படும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து குத்தகைதாரர் ஒருவர் கூறுகையில், இப்பகுதியில் உள்ள தென்னை மரங்களை குத்தகைக்கு எடுத்து குறிப்பிட்ட அளவு லாபம் பார்த்து வந்தேன். ஆனால், கஜா புயலுக்குப் பிறகு எனக்கு போதிய லாபம் கிடைக்கவில்லை. அதிக விலை கொடுத்து குத்தகை எடுத்த எனக்கு, லாபம் கிடைக்கவில்லை என்றாலும் நஷ்டம் ஏற்படாமல் இருந்தால் போதும் என்ற மனநிலையில் இருந்தேன். ஆனால் தற்போது ஐந்து மாதங்களுக்குப் பிறகு காய்த்த தேங்காய்கள் அழுகிய நிலையிலும், சதைப்பற்று இல்லாமலும் இருப்பதால் இதை வாங்க யாரும் முன்வரவில்லை. இதனால் எங்களது வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது என்றார் அவர்.