முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
சௌரிராஜ பெருமாள் கோயிலில் தங்க கருட சேவை
By DIN | Published On : 15th May 2019 08:52 AM | Last Updated : 15th May 2019 08:52 AM | அ+அ அ- |

வைகாசி பிரமோத்ஸவத்தையொட்டி, திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாள் கோயிலில் மின் அலங்காரத்துடன் கூடிய ஓலை சப்பரத்தில் தங்க கருட சேவை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
பெருமாளின் கீழை வீடாகவும், 5 ஆழ்வார்களால் 129 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகவும் விளங்குகிறது நாகை மாவட்டம், திருக்கண்ணபுரத்தில் உள்ள சௌரிராஜ பெருமாள் கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பிரமோத்ஸவம் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டின் வைகாசி பிரமோத்ஸவம் கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, தினமும் காலை 9 மணிக்கு தங்கப் பல்லக்கில் திருமேனி சேவையும், இரவு 9 மணிக்கு வெவ்வெறு வாகனங்களில் பெருமாள் வீதியுலாவும் நடைபெறுகின்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தங்க கருட சேவை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தங்கப் பல்லக்கில் வெண்ணெய்த்தாழி உத்ஸவம் மே 17-ஆம் தேதியும், தேரோட்டம் மற்றும் தீர்த்தவாரி 18 -ஆம் தேதியும், வெள்ளி ரத புறப்பாடு 21-ஆம் தேதியும் நடைபெறுகின்றன.